சிறீலங்கா படையினரினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் திட்டமிட்ட முறையில் மறைக்கப்பட்டும் சாட்சியங்கள் அழிக்கப்பட்டும் வரும் நிலையில் சனல்4 ஊடகங்கள் அதனை ஆதாரபூர்வமாக வெளியுலகுக் காட்சிப்படுத்தி அதிர்ச்சியளித்தது.
'சிறீலங்காவின் கொலைக்களம்' எனும் ஆவணப்படத்தில் பல போர்க்குற்ற குற்ற ஆதாரங்களை வெளிப்படுத்தி சிறீலங்கா அரசிற்கு மேற்குலக நாடுகளினால் பெரும் அழுத்தத்தினை கொடுக்க உதவியாக அமைந்தது.
இதனை தொடர்ந்து கொலைக்களத்தின் தொடர்ச்சியாக 'தண்டிக்கப்படாத போர்க்குற்றம்' என்ற இரண்டாவது ஆவணப்படத்தினை வெளியிட தீர்மானித்துள்ளது சனல்4 தொலைக்காட்சி. இக்காணொளியில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை அதன் தயாரிப்பாளர் Callum Macrae, ‘தி இன்டிபென்டென்ட்' நாளேட்டுக்கு எழுதிய கட்டுரையில் விபரித்துள்ளார்.
போர் தவிர்ப்பு வலயத்தில் பொதுமக்கள் மீது சிறிலங்காப் படையினர் கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதற்கு ஆதாரபூர்வமான சாட்சியங்களை முன் வைக்கவுள்ளது இந்த காணொளி.
உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற வானத்துடன் சென்ற ஐ.நாவின் இரண்டு சர்வதேச மனிதாபிமானப் பணியாளர்கள், சிறிலங்கா அரசினால் போர் தவிர்ப்பு வலயமாக முதலில் அறிவிக்கப்பட்ட பகுதியில் அமைந்திருந்த- உடையார்கட்டில் உள்ள ஆரம்பப் படசாலையில் அமைந்திருந்த தற்காலிக மருத்துவமனை அருகே சிக்கிக் கொண்டனர்.
இதன்போது தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் எறிகணைகளில் இருந்து பாதுகாப்புத் தேட, ஏனைய பொதுமக்களின் உதவியுடன் அவர்கள் பதுங்குகுழி தோண்டத் தொடங்கினர்.
வழக்கம் போலவே, அவர்களில் ஒருவரான அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த பீற்றர் மக்கே, தன்னிடம் இருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் தமது நிலையை அடையாளப்படுத்தும் ஆள்கூறை சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனுப்பினார்.
அடுத்த பல நாட்களாக தொடர்ச்சியாக பாரிய எறிகணை வீச்சுகள் அந்தப் பகுதியில் இடம்பெற்றன.
அவற்றில் பல ஐ.நா பதுங்குகுழியை நேரடியாகவும் தாக்கின. சில அருகிலும் வீழ்ந்தன. டசின் கணக்கானோர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் மோசமாக காயமடைந்தனர். இவை அனைத்தையும் ஐ.நா பணியாளர்கள் தமது கமாராவில் பதிவு செய்துள்ளனர்.
சிறீலங்கா படையினர் திட்டமிட்ட முறையில் பொதுமக்கள் மீது ஏறிகணைத் தாக்குதலினை மேற்கொண்டனர் என்பதற்கு இது ஓர் ஆதரமே போதும் என தெரிவித்துள்ளார் Callum Macrae.
அத்துடன் இறுதிக்கட்ட போரின் கடைசி நாட்களில் சரணடைந்த, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் தலைவர்கள், போராளிகள் நீதிக்குப்புறமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலும் இக்காணொளி ஆதாரப்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார். |
No comments:
Post a Comment