flashvortex.

Wednesday, March 21, 2012

விறுவிறுப்பான இறுதிக்கட்டதை நோக்கி ஜெனிவா களச்சமர்

ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா மீதான தீர்மானம் குறித்த இறுதி நேரப் பரபரப்புகள் தீவிரமடைந்துள்ளன. 

அமெரிக்காவிற்கு வலுச் சேர்க்கும் முகமாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் ஜெனிவாவுக்கு நேரடியாக சென்று களத்தில் குதித்துள்ளார். 

ஹிலாரி தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் குழு தீர்மானத்தை ஆதரிக்குமாறு கோரி ஏனைய நாட்டுப் பிரதிநிதிகளுடன் தீவிர பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது.  தீர்மான வரைவின் மீதான வாக்கெடுப்பு நாளை மாலை அல்லது நாளைமறுதினம் காலை இடம்பெறும் என்று உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. 

தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக இந்தியப் பிரதமர் அறிவித்ததன் பின்னர், வெளி விவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன் நேற்றுமுன்தினம் ஜெனிவாவிற்கு சென்று சேர்ந்தார். சிறீலங்கா விவகாரத்தில் மேலும் சூடு பிடித்துள்ளது என ஜெனிவாவில் உள்ள ராஜதந்திரிகள் கூறுகின்றனர். 
 
தீர்மானத்துக்கு முடிந்த வரையில் அதி கூடிய நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் அமெரிக்கா தற்போது முனைப்புக் காட்டி வருகின்றது. நேற்று மாலை வரை ஹிலாரியுடன் நடத்தப்பட்ட இராஜதந்திரச் சந்திப்புக்களை அடுத்து, சிறீலங்காவிற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிய நாடுகளில் சிலகூட தீர்மானத்தை ஆதரிப்பதாக அமெரிக்காவுக்கு உறுதியளித்துள்ளன.

சிறீலங்காவிற்கு எதிராக தீர்மானம் தொடர்பிலான பக்க நிகழ்வு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. வோஷிங்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. 
 
இந்த நிகழ்வில் பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். சிறீலங்கா மீதான தீர்மானத்தை ஆதரிப்பதன் அவசியம் என்ன என்பதை இந்த நிகழ்வு வலியுறுத்தும். 
 
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவது மட்டுமன்றி, சிறீலங்காவில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படுவதன் அவசியமும் இந்த நிகழ்வில் எடுத்துரைக்கப்படும்.
 
தீர்மானம் நிறைவேறாமல் தடுப்பதற்கான பகீரத முயற்சிகளில் சிறீலங்கா அரசும் அதன் அதிகாரிகளும் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறார்கள். 

அமெரிக்க எதிர்ப்பு நிலை வாதத்தை முன்வைத்து சிறீலங்கா எடுத்துவரும் முயற்சிகளுக்கு தற்போது ஆதரவு குறைந்தே வருவதாக இராஐதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

No comments:

Post a Comment