flashvortex.

Friday, March 23, 2012

தமிழர்களுக்கு நீதி கிடைக்கவே தீர்மானத்தை ஆதரித்தோம்: பிரதமர்

இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தோம்'' என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்போம், என பிரதமர் மன்மோகன்சிங் பார்லிமென்ட்டில் கூறியிருந்தார். இதற்கு ஏற்ப, ஜெனிவாவில் ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்து ஓட்டளித்தது. இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் நேற்று குறிப்பிடுகையில், "இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தோம். மற்றபடி இலங்கையின் இறையாண்மையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தமிழர்கள் விஷயத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட சாதக பாதகங்களை ஆராய வேண்டும் என்பதற்காக தான் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கு கவுரவம், நீதி, சமத்துவத்தின் அடிப்படையில் எதிர்காலம் அமைய வேண்டும்' என்றார்.
பிரதமருக்கு ஜெ., நன்றி: ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளித்த மத்திய அரசுக்கு, முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் உரிய நீதி கிடைக்க, மத்திய அரசு தலையிட வேண்டும். இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், இந்த தீர்மானத்தின் மீது, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என வற்புறுத்தி, இரண்டு கடிதம் எழுதினேன். இதற்கிடையே இந்த தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது என இலங்கை வெளியுறவு அமைச்சர், நமது வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிடம் வற்புறுத்தினார். இதனால், இந்த தீர்மானத்தை ஆதரிப்பதா, வேண்டாமா என்ற குழப்ப நிலையில் மத்திய அரசு இருந்தது. இதைத் தொடர்ந்து, பார்லிமென்டில் அ.தி.மு.க., உறுப்பினர்கள், தீர்மானத்தை ஆதரிக்கும்படி மத்திய அரசை வற்புறுத்தினர். தீர்மானத்தை ஆதரிப்பதாக பிரதமர் கூறிய பதிலும் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளும் குரல் கொடுத்தன. இந்த நிர்பந்தத்தின் பேரில் மத்திய அரசு, நேற்றைய தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளித்தது, எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைத்துள்ளது. தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளித்த மத்திய அரசுக்கு, உலகத் தமிழர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஞானதேசிகன், தமிழக காங்., தலைவர் ""இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்ததன் மூலம் மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும், இலங்கை அப்பாவி தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளது, மனித உரிமை மீறல்களை இந்தியா என்றைக்கும் ஆதரிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில், 30 லட்சத்திற்கும் மேல் வாழும் தமிழர்களுக்கு உரிமையும், நல்ல வாழ்க்கை முறையும், அரசியல் தீர்வும் பெற்றுத்தர காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் தொடர்ந்து பாடுபடும். தீர்மானத்தை ஆதரித்ததற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவுக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment