flashvortex.

Friday, March 23, 2012

இலங்கையில் தனிஈழம் உருவாவதே எனது கனவு: கருணாநிதி

இலங்கையில் தனிஈழம் உருவாவதே எனது கனவு,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா., கூட்டத்தில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் வெற்றியைத் தான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்தேன். இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா ஓட்டளித்ததற்கு, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்திக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இந்த தீர்மானம் வெற்றி பெற்றதன் மூலம், அங்கு நடந்த மனித உரிமை மீறல்களுக்கு, உலக நாடுகள் முன், தலை குனிந்து இலங்கை பதில் சொல்ல வேண்டியுள்ளது. இதன் மூலம், இது போன்ற கொடுமைகள் இனிமேல் நடப்பது தடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தனி ஈழம் உருவாவதே எனது கனவு. ஆனால், அது, இதுவரை நிறைவேறாததற்கு அங்குள்ள போராளிகளுக்குள் நடந்த சகோதர யுத்தமே காரணமாக அமைந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழர்கள் மீது தாக்குதல்: கருணாநிதி அச்சம்: ஐ.நா., மனித உரிமை கமிஷனில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக, இந்தியா ஓட்டளித்ததற்கு, பிரதமருக்கும், சோனியாவுக்கும் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர்கள் இருவருக்கும் தி.மு.க., தலைவர் கருணாநிதி அனுப்பியுள்ள கடிதம்:தமிழர்களுக்கு எதிராக, ராஜபக்சே அரசால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட, ஐ.நா., தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா ஓட்டளித்ததற்கு, மிகுந்த மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விஷயத்தில், உலகத் தமிழர்களும் இந்தியாவுக்கு நன்றியுடன் இருப்பர். தீர்மானம் நிறைவேறிவிட்டதன் எதிரொலியாக, இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் அத்தகைய விரும்பத்தகாத நடவடிக்கைகள் நடந்துவிடாமல், தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தக்க வைத்துக்கொண்டதில் ஆச்சர்யமில்லை: ""நிலைமைகளை உணர்ந்து பதில் சொல்பவர் அல்ல மத்திய அமைச்சர் கிருஷ்ணா,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி காட்டமாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பார்லிமென்டில் இலங்கைப் பிரச்னை வரும்போதெல்லாமல், அந்நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை பற்றி கவலைப்படாமல் மத்திய அமைச்சர் கிருஷ்ணா பேசக் கூடியவர். பார்லிமென்ட் விவாதத்தின் போது, இலங்கைக்கு எதிரான நிலையை எடுப்பதில் இந்தியா யோசிக்க வேண்டும் என கிருஷ்ணா கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., உறுப்பினர்கள், தென்னாப்பிரிக்கா, வங்கதேச பிரச்னைகளில் இந்தியாவின் நிலை என்ன என கேட்ட போது, அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. ஐ.நா., மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என, பிரதமரே தெரிவித்த பின்பும், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை என கிருஷ்ணா போன்றவர்கள் கூறுவது, பிரச்னையை திசை திருப்பும் முயற்சியாக உள்ளது.

இடைத்தேர்தலில் ரூ.25 கோடி: அ.தி.மு.க., ஆட்சி வந்து, ஒன்பது மாத கால ஆட்சியில் பால் விலை, பஸ் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. மின்வெட்டால் தமிழகம் இருளில் சிக்கியுள்ளது. இவ்வளவு செய்த பின்பும், சங்கரன்கோவிலில் அ.தி.மு.க., வேட்பாளர் 94 ஆயிரத்து 477 ஓட்டுகள் பெற்றுள்ளார். தி.மு.க., வேட்பாளர் 26 ஆயிரத்து 212 ஓட்டுகள் வாங்கியுள்ளார். சட்டசபை பொதுத் தேர்தலை விட அ.தி.மு.க., 22 ஆயிரத்து 680 ஓட்டுகளை அதிகமாகவும், 35 ஆயிரத்து 690 ஓட்டுகளை தி.மு.க., குறைவாகவும் பெற்றுள்ளது. அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு, 32 அமைச்சர்கள் சங்கரன்கோவிலில் முகாமிட்டு செயல்பட்டுள்ளனர். அ.தி.மு.க., ஓட்டுகள் அதிகரிக்க பண பட்டுவாடாவே காரணமாகக் கூறப்படுகிறது. இடைத்தேர்தலில், ஆளும் கட்சி செலவழித்த தொகை 25 கோடி ரூபாயைத் தாண்டும். இதை பார்க்கும் போது, அ.தி.மு.க., அதன் வசம் இருந்த தொகுதியை, தக்க வைத்துக் கொண்டதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை என அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment