flashvortex.

Sunday, March 18, 2012

பிசுபிசுத்துப் போன சிறீலங்காவின் இராஜதந்திரம் - துளியும் மதிக்காத மேற்குலம்

அமெரிக்காவினால் முன்  வைக்கப்பட்டுள்ள பிரேரனையை தோற்கடிக்கும் முயற்சியில் சிறீலங்கா கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. அதாவது உப மாநாடுகளை நடாத்தி தமக்கான ஆதரவைத் திரட்டும் ஒரு திட்டமிடல்கள் ஐ.நா. மனித உரிமைச் சபையில் இடம்பெற்று வருகின்றது.

இருந்தும் சிறீலங்காவின் உப மாநாடுகளை சர்வதேச நாடுகள் அனைத்தும் புறக்கணித்து வருவதாகத் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐ.நா மனித உரிமைச் சபையின் பிரதான அமர்வு இடம்பெறும் சமவேளை, உப மாநாடுகள் இடம்பெறுவது வழமையான ஒன்று.
இந்நிலையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையினை தோற்கடிக்கும் நோக்கில், சிறீலங்கா அரச தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் உப மாநாடுகள் பலவும், தொடர்ச்சியாக பிசுபிசுத்து வருவதாகவும் நேற்று முன் தினம் நடைபெற்ற சிறீலங்காவின் உப மாநாட்டில் எட்டுப் பேர் மட்டுமே பங்கேற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெனீவாவில் முகாமிட்டுள்ள சிறீலங்கா அரச தரப்புக் குழுவினரோடு இணைந்துள்ள, ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரும், அமைச்சருமான ரஜீவ விஜேயசிங்கவினால் நேற்றைய உப மாநாடு நடாத்தப்பட்டிருந்தது.

டென்மார்க், இந்தியா தவிர்ந்த பிற நாடுகள் பலவும் இந்த உப மாநாட்டை புறக்கணித்துள்ளதோடு, இராஜதந்திரிகளையோ அல்லது மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகளையோ இதில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

போருக்கு உதவிய அமெரிக்கா போன்ற பல மேற்குலக நாடுகள் தற்போது ஏன் போர்க்குற்றச்சாட்டுக்களை தங்கள் மீது சுமத்துகின்றன என இலங்கையின் அரச தரப்பு பிரதிநிதி ரஜீவ விஜேயசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

அமெரிக்காவின் பிரேரணை, சிறீலங்காவின் இறையாண்மைக்குள் தலையிடுகின்ற விடயமென, வழமையான சிறீலங்கா அரச தரப்பின் பல்லவியையே ரஜீவ விஜேயசிங்கவும் இங்கு பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment