flashvortex.

Monday, March 19, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: மந்திரி நாராயணசாமி நம்பிக்கை

இலங்கைக்கு எதிராக, ஐ.நா., சபையில் கொண்டு வரப்படும் தீர்மானம் குறித்து, பிரதமர் நல்ல முடிவை எடுப்பார்' என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கை மீதான மனித உரிமை மீறல் பிரச்னையில், இந்தியா என்ன செய்யப் போகிறது என்பது, தமிழக, புதுச்சேரி மக்கள் உன்னிப்பாக கவனித்து வரும் விஷயமாக உள்ளது. நானும், மத்திய அமைச்சர் வாசனும், பிரதமரை சந்தித்து, ஐ.நா., சபையில், இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளோம். மூன்று நாட்களுக்கு முன், தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன் தலைமையிலான காங்., கட்சியினர், பிரதமரிடம் இது சம்பந்தமாக மனு கொடுத்தனர். உலகத்தில் எந்த இடத்தில் மனித உரிமை நடந்தாலும், அதை இந்தியா பார்த்துக் கொண்டிருக்காது.


இலங்கைக்கு எதிராக, வரும் 23ம் தேதி கொண்டு வரப்படும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என, நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பெரும்பாலான மத்திய அமைச்சர்கள், புதுச்சேரி, தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்கள், ஒத்த கருத்தோடு உள்ளனர். எனவே, பிரதமர் நல்ல முடிவை எடுப்பார். தமிழக மீனவர்கள் இலங்கை கப்பல் படையால் தாக்கப்படுவது குறித்து, தமிழக அரசியல் கட்சிகள், தொடர்ந்து அறிக்கை கொடுக்கின்றன. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது சம்பந்தமாக, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காரைக்கால், ராமேஸ்வரம், கீழக்கரை மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு, படகுகள் சிறைபிடிக்கப்பட்டபோது, மீனவர்களை விடுதலை செய்ய, பல முயற்சிகளை மத்திய அரசும் நானும் செய்திருக்கிறோம்.


இது குறித்து, பிரதமர், இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். ராஜபக்ஷே டில்லி வந்தபோது, மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள், அங்கு பேச்சுவார்த்தையில் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து, தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்களுடன் பேசி, ஒப்பந்தம் போட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

No comments:

Post a Comment