flashvortex.

Wednesday, July 24, 2013

துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள்…….?????? கதை – 02

'எப்படித்தான் இந்த பிஞ்சுக்குழந்தையை விட்டுட்டு போக இவளுக்கு மனசு வந்திச்சுதோ? அந்த கடவுள் தான் காப்பாத்தி இந்த பிள்ளையளுக்கு தாய குடுத்திருக்கு' என்று ஒரு வயது சின்ன
குழந்தையினை இடுப்பில் வைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தார் சோபா.


இது வாழ்வா? சாவா? என்ற போராட்டம். சாவதற்கு துணிந்து நெருப்பில் எரிந்து தன்னையே அழித்து கொள்ள துணிந்த கம்ஷானா வை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். யாழ் போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியின் ஓர் ஓரமாய் திரைச்சீலையால் மறைக்கப்பட்ட நிலையில் ஒரு குரல் அம்மா அம்மா என அனுங்கியது. எட்டிப்பார்க்க என் மனம் துடித்தது. திரையை விலத்தி மெதுவாக பார்த்தேன். நெருப்பின் கோர தாண்டவத்தில் புன்னாகிப்போன கம்ஷனா வலியின் வேதனையில் துடித்துக்கொண்டிருந்தாள்.

கணவனுடனான சண்டையால் தன் உயிரை மாய்த்து கொள்ள துணிந்து விட்;டாள்.

எதற்காக இந்த குடும்ப தகராறு? உயிரைவிடும் அளவிற்கு என்ன நடந்தது? பொலஸார் கடன்பிரச்சனையால் தீக்குளிப்பு என்று கூறியதாக சோபா கூறினாள். எல்லாம் அவன் கணவனாலேயே வந்தது. . ஆரம்பத்;தில் எல்லாக்குடும்பத்தினை போலவும் சந்தோசமாகத்தான் கம்சனா வாழ்வினை ஆரம்பித்தாள். இவள் கணவன் நிரோசின் சம்பாத்தியம் இருவருக்குமே போதுமானதாய் இருந்தது.  இவர்களுக்கு என்று குழந்தைகள் வர கணவனின் சம்பளம் இவர்களின் செலவை விட குறைவாக இருந்தது. இதனால் இவள் ஆடைகளை தைக்க ஆரம்பித்தாள்.

இதன் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார ரீதியான பிரச்சனையை கட்டுப்படுத்த வெளிநாடு செல்கின்றேன் என்று நிரோஷ் கூறியுள்ளான். வெளிநாட்டுக்கு சென்றால் நல்ல நிலைக்கு வர முடியும் என்ற நம்பிக்கையில் இவளும் கணவனை அனுப்பி வைத்தாள். ஆனால் அதில் எந்த பயனும் இல்லை. வெளிநாட்டுக்கு சென்ற கணவன் ஏதோதோ காரணங்கள் கூறி திரும்பி வந்துவிட கம்சனா என்ன செய்வது என்று திகைத்தாள்.

கணவனை வெளிநாட்டுக்கு அனுப்ப பணத்தினை கடன்பட்டுதான் அனுப்பினாள். கடன் சுமையும் கூடியது. வெளிநாட்டில் இருந்து வந்த கணவன் நிரந்தர தொழில் இன்மையால் குடும்பத்தில் சண்டைகளும் பிரச்சினைகளும் துளிர் விடத் தொடங்கியது.

இதன் பின்னர் நிரோஷ் ஏஜேன்சி மூலம் வெளிநாட்டு அனுப்புகின்றேன் என்று கூறி எல்லோரிடமும் பணத்தினைப் பெற்று ஏமாற்ற ஆரம்பித்தான். இதனால் சமூகத்தில் இவனுக்கு இருந்த மதிப்பு குறைந்தது. அது மட்டுமில்லாமல் கம்சனாவினை தவிர்த்து வேறு பெண்களுடனும் தொடர்பினை வைத்திருந்தான். இதனால் கம்சனாவின் கோபம் அதிகமாக தினம் தினம் பிரச்சனைகள். அக்கம் பக்கத்தினரின் பேச்சுக்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் கூனிகுறுகினாள். இதனால் இவள் கணவன் வீட்டுக்கு வராமல் வெளியிலே தங்க ஆரம்பித்தான். தீடிரென வீட்டுக்கு வந்து தனது பிள்ளைகளை பார்த்து விட்டு போவான்.

   வெளிநாட்டிற்கு நான் அனுப்புகின்றேன் என்று பலரிடம் வேண்டிய பணத்தினைக் கேட்டு பணம் கொடுத்தவர்கள் நெருக்க ஆரம்பித்தனர் நிரோசை. இவன் அதனை பெரிதாக எடுக்காததினால் கடன் கேட்டு வீட்டு வாசலுக்கும் வரத்தொடங்கி விட்டனர். இதனால் கணவன் வீட்டிற்கு வரும் போதெல்லாம் பிரச்சனைகள் அதிகமாகின. அப்படியான ஒரு சூழ்நிலையில்தான் கம்சனா தீக்குளித்தாள்.

 ' அவர் வெளிநாட்டில் இருந்த காலப்பகுதியில் இரண்டு பிள்ளைகளையும் வைத்து கொண்டு இவள் தான் ஆடைகள் தைத்து குடும்பத்தை பார்த்தவள். இப்பவும் தனியாளாய் அவளால் இந்த பிள்ளையள பார்க்க முடியும். அவசரப்பட்டு இந்த முடிவினை எடுத்திட்டாள் என்று கம்ஷனாவின் அக்கா சோபா புலம்பினார்.

கடன் பிரச்சினையால் தினம் தினம் வீட்டில் சன்டைகள் உருவாகின்றன. மனதில் மகிழ்ச்சி இன்றி இருப்பவர்கள் சிறிய சண்டையையும் புயலாக மாற்றி விடுகின்றனர். ' இப்ப இவள் இப்படி செய்ததால் என்ன நன்மை நடந்தது. கடன் இல்லாமல் போட்டுதா? இல்லை தானே வீண் மனக்கஸ்ரமும் வருத்தமும் தான்.' என சோபா மேலும் தெரிவித்தார். அவர் சொல்வதும் சரி தான் தற்கொலை செய்து கொண்டால் கடன் இல்லாமல் போய்விட்டதா அல்லது கடன் தந்தவர்கள் கடனை கேட்காமல் விடப்போகின்றனரா? அர்த்தமின்றிய உயிர் இழப்புகள். ஏன் இந்த கோழைத்தனம் ? இவர்கள் நினைக்கின்றார்கள் தமக்கு மட்டும் தான் பிரச்சினைகள் வருகின்றது.

 உலகில் யாருக்கும் வராத தர்ம சங்கடம் தமக்கு வந்து விட்டது என்று மனம் உடைந்து போனவர்கள் இத்தகைய முடிவினை எடுக்கின்றார்கள். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு பிரச்சினை இருந்து கொண்டு தான் இருக்கின்றது. ஏழைக்கு பணம் பிரச்சினை என்றால் பணக்காரனுக்கு உடல் பிரச்சினை.

வங்கிகள் கடன்களை வழங்குகின்றன. லீசிங் கம்பனிகள் தவணை முறையில் பொருட்களை வழங்குகின்றது. கடன் தொடர்பான போதிய அறிவு இன்மையாலே மக்கள் கடன்களை வாங்கி கட்ட முடியாமல் இவ்வாறான முடிவினை தேடுகின்றனர்.  

தற்கொலை வீதத்தைத் தடுப்பதற்கு கிராமிய மட்டத்திலிருந்து விளிப்புணர்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட வேண்டும் அவர்களுக்கான உளவள ஆலொசனைகள் வழங்கப்படவேண்டும்,  பாடசாலை மட்டத்திலிருப்பவர்களுக்காக தற்கொலை மற்றிய விளிப்புணர்வு மற்றும் தற்துணிவு தொடர்பாக ஆலொசனைகள் வழங்கப்பட வேண்டிய கட்டயத் தேவை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment