flashvortex.

Tuesday, March 20, 2012

சிரியாவில் மோதல் முற்றுகிறது:டமாஸ்கஸ் வந்தது அமைதிக் குழு

சிரியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, நேற்று நாட்டின் பல பகுதிகளில் கடும் சண்டை நடந்தது. இதில், எத்தனை பேர் பலியாயினர் என்பது தெரியவில்லை. இந்நிலையில், ஐ.நா., - அரபு லீகின் சிறப்பு பிரதிநிதி கோபி அனன் அனுப்பிய அமைதிக் குழு நேற்று சிரியா வந்தடைந்தது.

சிரியாவில், அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் ஓராண்டைக் கடந்து, சில நாட்களாகி விட்ட நிலையில், அமைதி ஏற்படும் வழி எதுவும் தெரியவில்லை.
தலைநகர் டமாஸ்கசின் அருகில், சிறை, விமான நிலையம், பிரான்ஸ் ராணுவத் தளம் ஆகியவையும், அதிபர் மாளிகையும் அமைந்துள்ள அல் மெஸ்ஸா பகுதியில், நேற்று அதிபர் ராணுவத்திற்கும், சிரிய விடுதலை ராணுவத்திற்கும் கடும் மோதல் நிகழ்ந்தது.
இதில், கிரேனேடுகள், ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. இந்த மோதலில், மூன்று பயங்கரவாதிகளும், ஒரு பாதுகாப்பு வீரரும் பலியானதாக சிரிய அரசு தெரிவித்தது. அதேபோல் ஹமா மாகாணத்திலும் கடும் மோதல் நடந்தது.

சமீபத்தில் தான், டமாஸ்கசின் புறநகர்ப் பகுதிகள் அனைத்தையும், சிரிய ராணுவம் மீண்டும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத் தக்கது.இதற்கிடையில், ஐ.நா.,- அரபு லீகின் சிறப்புப் பிரதிநிதி கோபி அனன் அனுப்பி வைத்த, ஐந்து பேர் அடங்கிய அமைதிக்குழு நேற்று டமாஸ்கஸ் வந்தது.சிரியாவில் உடனடியாகச் சண்டையை நிறுத்தி, மனிதாபிமான உதவிகள் வழங்குவதற்கான சூழலை பேச்சுவார்த்தை மூலம், இக்குழு செய்யும் என கோபி அனனின் செய்தித் தொடர்பாளர் நேற்று கூறினார்.

இந்நிலையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜேக்கப் கெலன்பெர்கர், ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்குச் சென்றுள்ளார்.அங்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவைச் சந்தித்து, மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காகவது உடனடி சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தும்படி கோரியுள்ளார்.

No comments:

Post a Comment