flashvortex.

Tuesday, March 20, 2012

கூடங்குளம் மக்களுக்கு அச்சம் தேவையில்லை : அரசு கூறும் தகவல்

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று, தமிழக அரசு நியமித்த வல்லுனர் குழு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு நியமித்த வல்லுனர் குழு அளித்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் குறித்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
* கூடங்குளம் பகுதியில் மிகப் பெரிய நில நடுக்கமோ, சுனாமியோ ஏற்பட்டதாக சரித்திரம் இல்லை.
* கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் அச்ச உணர்வுகளைப் போக்க, உண்மையான முயற்சிகள் அனைத்தையும் அரசு எடுத்துள்ளது. மத்திய அரசு அமைத்த வல்லுனர் குழுவும், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மிக ஆழமாக ஆராய்ந்து, உள்ளூர் மக்களின் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகள் அனைத்துக்கும் பதில்களை அளித்துள்ளது. இந்த வல்லுனர் குழு, அணு மின் நிலையத்தை பார்வையிட்ட போது செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் அறிக்கையில் விவரித்துள்ளது.

* இந்த காரணங்களால், அரசு இத்திட்டத்தின் செயல்பாடுகளை மீண்டும் துவக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து, அதன் மூலம் விரைவில் மின் உற்பத்தி துவக்க ஆலோசிக்கலாம்.
* மேலும், உள்ளூர் மக்கள் இடையே சுமுகமான உறவுகள் ஏற்பட வழிவகுக்கும் வகையில், உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் சமூக பொருளாதாரத் திட்டங்களை இப்பகுதியில் செயல்படுத்த, அணுசக்தித் துறை கேட்டுக் கொள்ளப்படலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ள வல்லுனர் குழு, சில திட்டங்களையும் பரிந்துரைத்துள்ளது. அவை வருமாறு:
* கூடங்குளம் பகுதி மக்களிடையே இந்த மின் நிலையத்தின் சாதகமான அம்சங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
* கூடங்குளம் பகுதியில் வசிக்கும் உள்ளூர் மீனவர்கள், தங்கள் விசைப் படகுகளைச் சரிசெய்ய, தற்போது நாகர்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும் நிலையை மாற்றி, கூடங்குளம் பகுதியிலேயே விசைப் படகுகளை சரிசெய்யும் வசதிகளை ஏற்படுத்தித் தருவது.
* உள்ளூர் மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை சேமித்து வைத்து, பின்னர் நல்ல விலைக்கு விற்க ஏதுவாக, ஒரு குளிர் பதனீட்டு நிலையம் அமைத்துத் தருதல்.
இவ்வாறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அறிக்கையை ஏற்று தான், கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்ற முடிவுக்கு, தமிழக அமைச்சரவை வந்தது.

No comments:

Post a Comment