flashvortex.

Tuesday, March 20, 2012

பிரதமரின் அறிவிப்பு: கருணாநிதி திருப்தி

இலங்கைக்கு எதிரான ஐ.நா., தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருப்பது, தனக்கு திருப்தி அளிப்பதாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:இலங்கையில் வாழையடி வாழையென வாழ்ந்து வரும் தமிழ் மக்கள், அனைத்து அரசியல் உரிமைகளையும், பாதுகாப்பையும் பெற்று, சுயமரியாதையுடனும், நிம்மதியாகவும் வாழ, உகந்த சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இதற்காகற தி.மு.க., 1956ம் ஆண்டில் இருந்தே தொடர்ந்து குரல் கொடுத்தும், போராடியும் வருகிறது.ஐ.நா., தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காவிட்டால், உண்ணாவிரதம் என்று கூறியிருந்தேன். தற்போது, இந்திய அரசே அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் என அறிவித்திருப்பதால், நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.பிரதமரின் பதில் எனக்கு திருப்தியாக உள்ளது. இது, இலங்கைத் தமிழர்களுக்காக போராடியவர்களுக்கு கிடைத்த வெற்றி; இப்போது போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு கிடைத்த வெற்றி.
இந்நிலையில், உண்ணாவிரதம், உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்துக்கெல்லாம் தேவையில்லாமல் போய்விட்டது. தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் உண்ணாவிரதம் நடத்த வேண்டுமென அறிவித்திருந்தோம். அதன் பிறகு, மத்திய அரசு அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக, பிரதமரின் கருத்து வெளிவந்துள்ளது.எனவே, உண்ணாவிரதத்தை நடத்தப் போவதில்லை. அதேபோல, உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டமும் தேவையில்லை என, முடிவு செய்திருக்கிறோம். உயர்மட்டக் குழுவில் நிறைவேற்றுவதற்காக தீர்மானம் ஒன்றை புத்தகமாகத் தயாரித்திருந்தோம். பிரதமரின் அறிவிப்பு, நாம் விரும்பியவாறு வந்துவிட்ட காரணத்தால், அந்தப் புத்தகத்தை வெளியிடவில்லை.இவ்வாறு கருணாநிதி கூறினார்.

No comments:

Post a Comment