flashvortex.

Wednesday, March 21, 2012

கோட்டைவிட்ட கூட்டமைப்பு, காட்டிக்கொடுத்த ரணில்

தமிழ் மக்களுக்கு ஒரு கதை, ராஜபக்சக்களுடன் ஒரு கதை, இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் ஒரு கதையென அவைக்கு ஏற்ற மாதிரி ஒரு கதைகளைக்கூறி வரும் கூட்டமைப்பை ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் காட்டிகொடுத்திருக்கிறார். 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கோராத வடக்கு – கிழக்கு இணைப்பு விவகாரத்தினை ஏன் பெரிதாகக் கதைக்கிறீர்கள் என்று சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க கேள்வி எழுப்பியிருக்கின்றார். 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது. இச் சந்திப்பின் போது சிவில் சமூகப் பிரதிநிதிகள் ரணில் விக்கிரமசிங்கவிடம் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றனர்.
 நாட்டில் இயல்பு நிலை ஏற்பட வேண்டுமாக இருந்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். அவ்வாறு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நீங்கள் பதவிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வழங்குவீர்கள்? என்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் ரணிலிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அதற்குப் பதிலளித்த ரணில், தான் 13ஆவது சட்ட மூலத்தின் அடிப்படையில் தீர்வினை வழங்குவேன் எனத் தெரிவித்திருக்கின்றார். தற்போதைய ஜனாதிபதியும் இதே விடயத்தினையே தெரிவிக்கின்றாரே? என்று ரணிலிடம் மீண்டும் சிவில் பிரதிநிதிகள் கேட்டிருக்கின்றனர். தற்போதைய ஜனாதிபதி கூறிக்கொண்டே இருக்கின்றார். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீர்வினை வழங்குவோம் என்று ரணில் கூறியிருக்கின்றார்.
நீங்கள் ஆட்சிக்கு வந்தால் வடக்கு – கிழக்கு இணைப்பினை ஏற்படுத்துவீர்களா? என்று சிவில் பிரதிநிதிகள் கேட்டிருக்கின்றனர். இதற்குப் பதிலளித்த ரணில்,  அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வடக்கு – கிழக்கு இணைப்பு விவகாரத்தினைப் பற்றியே பேசவில்லை. இந் நிலையில் இந்த விடயத்தினை ஏன் பெரிதாக்குகின்றீர்கள்? என்று சிவில் சமூகத்தினரிடம் கேட்டிருக்கின்றார்.
 ஐ.தே.க ஆட்சிக்கு வந்தால் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைக்குமா? என்று கேட்ட போது, சர்வதேச விசாரணை என்பதற்கும் அப்பால், ஆபிரிக்க நாடொன்றில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு தரப்புக்களும் மன்னிப்புக் கோரியதுடன் பிரச்சினைகள் முடிவுக்கு வந்திருந்தன. அவ்வாறான செயற்பாடு ஒன்றினை இலங்கையில் மேற்கொள்ளலாம் என்ற ஆலோசனையினை தாம் கொண்டிருப்பதாக ரணில் தெரிவித்திருக்கின்றார்.
 இதேவேளை எதிர்வரும் மேதினத்தில் தம்முடன் இணைந்து நிகழ்வில் பங்கேற்குமாறு ரணில் விக்கிரமசிங்க சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் கோரியிருக்கின்றார், அதற்குப் பதிலளித்த அவர்கள் தாம் அதற்கு உடன்பட முடியாது எனத் தெரிவித்திருக்கின்றனர். ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் இணைந்து நிகழ்வில் பங்கேற்க உறுதியளித்திருப்பதாக ரணில் கூறியிருக்கின்றார்.
நேற்று கொழும்பின் தனியார் இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேதின நிகழ்வில் ஐ.தே.கவின் மேதின நிகழ்வில் தாமும் பங்கேற்போம் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment