flashvortex.

Wednesday, March 21, 2012

இத்தாலி கப்பலை விடுவிக்கலாம்: மத்திய அரசு நிபந்தனை விதித்தது

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கப்பல் ஊழியர்களை, கோர்ட் விசாரணைக்கு ஆஜராக்குவோம் என, இத்தாலி கப்பல் நிறுவனம் உறுதியளித்தால், இத்தாலி கப்பல் என்ரிகா லக்சியை விடுவிப்பதில், எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற நிபந்தனையை, மத்திய அரசு கேரள ஐகோர்ட்டில் தெரிவிக்க உள்ளது.
கேரளா, கொல்லம் நீண்டகரா துறைமுகத்தில் இருந்து, "செயின்ட் ஆன்டனிஸ்' என்ற மீன்பிடி படகில், பிப்ரவரி மாதம் 8ம் தேதி, 11 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள், ஆலப்புழா கடலோரப் பகுதியில், பிப்ரவரி மாதம் 15ம் தேதி மாலை 4.30 மணியளவில், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே, "என்ரிகா லக்சி' என்ற இத்தாலி எண்ணெய் கப்பலில் இருந்து, பாதுகாப்புப் படையினர் சுட்டதில், படகில் இருந்த இரு தமிழக மீனவர்கள் பலியாகினர்.இச்சம்பவம் குறித்து, கொல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கப்பலில் இருந்த இரு பாதுகாப்புப் படை வீரர்களை கைது செய்தனர். அவர்கள் இருவரும், தற்போது திருவனந்தபுரம் பூஜப்புரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இத்தாலி கப்பல், "என்ரிகா லக்சி' கைப்பற்றப்பட்டு, கொச்சி துறைமுகத்திற்கு வெளியே, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலை விடுவிக்க வேண்டும், கப்பல் பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என, கப்பல் நிறுவனத்தின் சார்பில், கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பலியான மீனவர்களின் குடும்பத்தினர் நஷ்ட ஈடுகோரியும், ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், கப்பலை விடுவிக்க வேண்டுமானால், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கப்பல் கேப்டன், ஊழியர்கள், கோர்ட் மற்றும் போலீசார் விசாரணைக்கு அழைக்கும்போது, தங்கள் செலவில் ஆஜராக்குவோம் என, கப்பல் நிறுவனம் உறுதியளிக்க வேண்டும். அவ்வாறு உறுதியளிக்கும்பட்சத்தில், கப்பலை விடுவிக்கலாம் என்பது தான், தற்போது மத்திய அரசு முடிவாக உள்ளது. இதுகுறித்து, விரைவில் கேரள ஐகோர்ட்டில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

இந்நிலையில், மீனவர்கள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, இந்திய கடற்பகுதியில் நடக்கவில்லை என்றும், அதனால், இவ்வழக்கை இந்தியாவில் நடத்த முடியாது என்றும், மீண்டும் இத்தாலி கூறி வருகிறது. எனவே, இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும் என, இத்தாலி தூதரக அதிகாரியும், பாதுகாப்புப் படை வீரர்களும், ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment