flashvortex.

Tuesday, March 27, 2012

அமெரிக்கா - சிறீலங்காவிற்கிடையில் அதிகரிக்கும் இராஐதந்திர போர்


இறுதி போரில் இடம்பெற்ற தாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய விரிவான அறிக்கை ஒன்று அடுத்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிறீலங்கா மீதான தனது பிடியை இறுக்கும் அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த அறிக்கை நாடாளுமன்றத்துக்கு வருகிறது.

ஜெனிவா மனித உரிமைகள் சபையில் சிறீலங்காவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையால் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு அடங்குவற்கு முன் இந்த அறிக்கை வெளிவரவுள்ளது.

இந்த விசாரணை அறிக்கையை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் தூதுவர் ஸ்ரீபன் ராப் அடுத்தவாரம் அமெரிக்க நாடாளுமன்றின் செனட்சபையில் சமர்ப்பிக்கிறார்.

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து நேரில் விசாரணைகளை நடத்துவதற்காகக் கடந்த பெப்ரவரி மாதம் ஸ்ரீபன் ராப் சிறீலங்காவிற்கு விஐயம் செய்திருந்தார். அதன்போது அவர் அரசதரப்பு, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

வன்னிக்குப் பயணம் செய்த அவர் அங்கு போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுடனும் நேரில் கலந்துரையாடினார். இதன்போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் நிலை தொடர்பாக அவர்களின் பெற்றோர் கண்ணீருடன் எடுத்துக் கூறியிருந்தனர். அத்துடன், அரசுக்குத் தெரியாமல் முல்லைத்தீவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்ட அவர் இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய தகவல்களையும் சேகரித்திருந்தார்.

இவற்றைக் கொண்டு அவர் தயாரித்த அறிக்கையே அடுத்த வாரம் அமெரிக்க செனட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிறீலங்கா தொடர்பாக, தூதுவர் ஸ்ரீபன் ராப் அமெரிக்க செனட் சபைக்குச் சமர்ப்பிக்கும் மூன்றாவது அறிக்கை இதுவாகும்.ஸ்்ரீபன் ராப்பின் இந்த அறிக்கையும் சிறீலங்காவிற்கு அரசுக்குப் பெரும் தலையிடியாக அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அமெரிக்கா மீதான சிறீலங்காவின் சீற்றம் மேலும் அதிகரிக்கும் எனவும் இது இரு நாடுகளுக்கிடையிலும் பெரும் விரிசலைக் கொண்டுவரும் எனவும் ராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment