flashvortex.

Saturday, March 24, 2012

அணு ஆயுதங்களற்ற உலகத்துக்கு இந்தியா ஆதரவு: பிரதமர்

அணு ஆயுதங்களற்ற உலகத்துக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும் என்பதை சியோல் அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் வலியுறுத்துவேன்'' என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை காலையில் தென் கொரியா செல்கிறார். தென் கொரிய அதிபர் லீ மியூங் பக் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு செல்லும் பிரதமருக்கு, ஞாயிற்றுக்கிழமை காலையில் அதிபர் மாளிகையான "ப்ளூ ஹவுசில்' வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அதிபர் லீ மியூங் பக்குடன் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதன் முடிவில், இந்திய-தென் கொரிய நாடுகளிடையே பயணம் செய்யும் இரு நாட்டு குடியுரிமை பெற்றவர்களுக்கு விசா நடைமுறைகளை எளிமையாக்குவது, பரஸ்பர பிராந்திய, பொருளாதார, கலாசார ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் கையெழுத்தாகவுள்ளன.
தமது சியோல் பயணத்துக்கு முன்னதாக புது தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

""அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2010-ம் ஆண்டு ஏப்ரலில் கூட்டிய முதலாவது அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் அணு பயங்கரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அந்த முயற்சியில் தீவிர பங்களிப்பை இந்தியா வழங்கி வருகிறது. ஜனவரி 2012-ல் தில்லியில் நடந்த ஷெர்பா கூட்டத்திலும் இந்த முயற்சி பற்றி ஆலோசிக்கப்பட்டது.

எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இந்தியா தனது அணுசக்தி திட்டங்களை விரிவுபடுத்தி வருகிறது. அணுசக்தியின் பயன்களுக்கு மக்கள் ஆதரவைப் பெருக்கும் வகையில் மிக உயரிய அளவிலான அணு பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும்.

வாஷிங்டனைத் தொடர்ந்து சியோலில் நடைபெறும் உச்சி மாநாட்டில் சர்வதேச அணு பாதுகாப்புக் கட்டமைப்பை மேம்படுத்த உரிய பரிந்துரை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

இதன் அவசியத்துக்கும் அணுப் பாதுகாப்பு, அணு ஆயுதப் பரவலற்ற பாதுகாப்பு போன்ற நமது குறை கூற முடியாத பதிவுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து உச்சி மாநாட்டில் பேசுவேன். அணு ஆயுதமற்ற உலகத்துக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு உண்டு என்பதையும் வலியுறுத்துவேன்'' என்று பிரதமர் கூறியுள்ளார்.

திங்கள்கிழமை காலையில் தென் கொரியாவில் உள்ள தொழில் நிறுவனங்களின் தலைவர்களைப் பிரதமர் சந்தித்துப் பேசுகிறார். அதன் பிறகு தலைநகர் சியோலில் நடைபெறும் அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார்.

கடந்த முறை வாஷிங்டனில் நடைபெற்ற உச்சி மாநாட்டின் போது, அணு பாதுகாப்புக்காக உலக நாடுகள் முன்வைத்த யோசனைகள் குறித்து சியோல் மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் விவாதிப்பர்.

குறிப்பாக, பயங்கரவாதிகளின் கைகளில் அணுசக்தி செல்வதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய உறுதியான நடவடிக்கை பற்றி பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் விவாதித்து முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment