flashvortex.

Wednesday, March 21, 2012

பிரான்ஸ் கொலைகள்:சந்தேக நபர் சுற்றிவளைப்பு

பிரான்ஸ் நாட்டின் துலூஸ் நகரில் மூன்று பாடசாலை மாணவர்களையும், யூத மதகுரு ஒருவரையும், பாதுகாப்பு படையினர் மூவரையும் சுட்டுக் கொன்றவர் என்று சந்தேகிக்கபடும் நபரை தாங்கள் சுற்றி வளைத்துள்ளதாக அந்நாட்டின் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அல்ஜீரிய வம்சாவழியைச் சேர்ந்த முகமது மெராஹ் எனும் அந்த நபர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபோது காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுளார்.
ஒரு கட்டத்தில் ஒரு கைத்துப்பாக்கியை அந்த சந்தேக நபர் தூக்கி எறிந்தார் என்றாலும் அவரிடம் இன்னமும் பெருமளவில் ஆயுதங்கள் இருக்கின்றன என்று பிரான்ஸின் உள்துறை அமைச்சர் க்ளாட் குவான் தெரிவித்துள்ளார்.தீவிரவாதத்துக்கு எதிரான சிறப்பு அதிகாரிகளுடன் அவர் ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும் பின்னர் அவர்களுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
சந்தேக நபரின் இரண்டு சகோதரர்கள், சகோதரிகளும் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

"பழிவாங்கும் நடவடிக்கை"

சந்தேக நபர் இருப்பதாக நம்பப்படும் அடுக்குமாடி குடியிருப்பு
இதனிடையே சந்தேக நபரான முகமது மெராஹ், பாலத்தீன குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் ஆப்கானிஸ்தானில் பிரெஞ்சு படைகள் நிலைகொண்டுள்ளதற்குப் பழிவாங்கும் நோக்கில், இந்தத் தாக்குதலை நடத்தியதாக காவல்துறையினரிடம் கூறியதாகத் தெரிகிறது.
அவர் ஆப்கானிஸ்தானுக்கு சென்று வந்துள்ளதாகவும் கருதப்படுகிறது.
ஒரு தாக்குதலை நடத்திய பிறகு தனது ஸ்கூட்டருக்கு மீண்டும் வர்ணம் பூச முயன்ற போதே காவல்துறையினர் அவரை கண்டுபிடித்துள்ளதாக அறியப்படுகிறது.
இதனிடையே குற்றவாளிகள் தங்களது செயல்களை நியாயப்படுத்த பாலத்தீனத்தின் பெயரை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று பாலத்தீனப் பிரதமர் சல்மான் ஃபையாத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment