flashvortex.

Friday, March 23, 2012

சிறீலங்காவை, இந்தியா எதிர்த்தமைக்கான காரணம் என்ன?

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது.இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிப்பதற்கான காரணங்களை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியப் பிரதிநிதி விளக்கியிருந்தார்.

இலங்கையின் படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்றிருந்தது.

இலங்கையில் வாழும் அனைத்து இன மற்றும் மதக்குழுக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையிலான அரசியல் தீர்வு மூலமான நல்லிணக்கத்தை அந்நாட்டில் கொண்டுவருவதற்கு இந்த பரிந்துரைகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திதருவதாய் இந்தியா நம்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் ஆர்வத்துடன் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
13ஆவது அரசியல் சாசன சீர்திருத்தத்தையும் அதற்கும் மேற்பட்டும் இலங்கையில் அதிகாரங்கங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை நோக்கி இலங்கை நடைபோட வேண்டும் என்றும் பரந்துபட்ட கலந்துரையாடலுடன் அரசியல் நடவடிக்கைகளை அது முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

செய்த காரியத்துக்கு ஆட்களைப் பொறுப்பேற்கச் செய்வதிலும் மனித உரிமைகளை பேணுவதிலும் தனக்கு இருக்கின்ற சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றும் நோக்கில் இலங்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் நல்லிணக்கம், சமாதானம் போன்ற இலக்குகளை அடைய இலங்கை போன்ற ஒரு ஜனநாயக நாட்டுக்கு போதிய அவகாசமும் செயல்படுவதற்கான இடமும் வழங்கபட வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்தது.

ஐ.நா.மனித உரிமை கவுன்சில் இலங்கை தமது இலட்சியங்களை எட்ட உதவியாக இருக்க வேண்டுமே ஒழிய தடையாக இருக்கக்கூடாது என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment