flashvortex.

Tuesday, March 20, 2012

புதிய ரயில்வே அமைச்சர் பதவியேற்பு

இந்தியாவின் புதிய ரயில்வே அமைச்சராக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, 57 வயதான முகுல்ராய் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ரயில் கட்டணத்தை உயர்த்தியதன் காரணமாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜியின் கோபத்துக்கு ஆளான தினேஷ் திரிவேதி ராஜினாமா செய்ததை அடுத்து, இதுவரை கப்பல்துறை இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த முகுல் ராய்க்கு இந்தப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத ரயில் கட்டணங்களை தொடர்ந்து அதே நிலையில் வைத்திருந்தால் ரயில்வே திவாலாகிவிடும் என்ற வாதத்தை மமதா பானர்ஜி ஏற்க மறுக்கிறார்.
கட்டண உயர்வு திரும்பப் பெற வேண்டும் என்ற மமதாவின் கோரிக்கை எந்த அளவுக்கு உடனடியாக அமல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை. ரயில்வே பட்ஜெட் குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது இது குறித்த அறிவிப்பு வெளியாகும்.
அதே நேரம் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தனது கட்சியைச் சேர்ந்தவரால் சமர்பிக்கப்பட்ட வரவு செலவு அறிக்கையை அதே கட்சி எதிர்ப்பது என்பது இதுவரை இல்லாத ஒருவிடயம். ஆளும் மத்திய கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்குத்தான் அதிக அளவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால், அவரின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளது.
அதே நேரம் தனது கட்சி, வறியவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று தொடர்ந்து கூறிவருவதாகவும், 19 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும் ஒரே ஒரு கேபினட் அமைச்சர் பொறுப்பை மட்டுமே தனது கட்சி வைத்திருப்பதையும் மற்றவர்கள் மறந்துவிடக் கூடாது என்று மமதா பானர்ஜி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment