flashvortex.

Thursday, March 22, 2012

மீண்டும் முதல்வர் பதவியை பிடிப்பாரா எடியூரப்பா? ஆதரவாளர்களுடன் டில்லி பயணம்

பா.ஜ., மேலிடத் தலைவர்களின் அழைப்பின்படி, முதல்வர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் பேரில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா உற்சாகமாக, டில்லி புறப்பட்டுச் சென்றார்.

கர்நாடக முதல்வர் பதவி கேட்டு பிடிவாதம் பிடித்து வந்த எடியூரப்பா, மூன்று நாள் பெங்களூரு ரிஸார்ட்டில், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை அடைத்து வைத்திருந்தார். மேலிடத் தலைவர்கள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள, எடியூரப்பா சம்மதம் தெரிவித்தார். கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின், ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்று, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறிய பின்னரே, எடியூரப்பா சமாதானம் அடைந்தார். அதே நேரத்தில், மூத்த தலைவர் அத்வானி, எந்தவித கருத்தையும் கூறவில்லை என்று கூறப்படுகிறது. எடியூரப்பாவுக்கு மீண்டும் முதல்வர் பதவி அளிப்பதை, அவர் விரும்பவில்லை. திட்டமிட்டபடி, நேற்று நடந்த கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், எடியூரப்பாவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக அவர் கூறியதாவது: பட்ஜெட் கூட்டத்தொடரில், நானும், என் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் கலந்து கொள்கிறோம். பட்ஜெட் கூட்டத்துக்கு பின், பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று, மேலிடம் உறுதியளித்துள்ளது. சட்டசபை கூட்டம் முடிந்த பின், டில்லி புறப்பட்டுச் செல்கிறேன். மேலிடத் தலைவர்களை சந்தித்து, என் தரப்பு நியாயத்தை எடுத்து கூறுவேன். என் பலத்தையும் நிரூ பிப்பேன். என்னை முதல்வராக்குவதற்கு, 70 பேர் மட்டுமல்ல, மேலிடம் கூறிய பின், 120 பேரும் எனக்கு ஆதரவளிப்பர். ஏற்கனவே கூறியது போன்று, தற்போது என்னை முதல்வராக்க முன் வந்துள்ளனர் எனக் கருதுகிறேன் என்றார். இதையடுத்து, நேற்று மாலை விமானம் மூலம் டில்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், உதாசி, உமேஷ் கட்டி, பசவராஜ் பொம்மை உட்பட பலர் சென்றனர்.

No comments:

Post a Comment