flashvortex.

Friday, March 2, 2012

இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை:இந்திய கம்யூ., அதிரடி முடிவு

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை; எதிர்ப்பும் இல்லை,'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறினார்.திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதன் பின், கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை; எதிர்ப்பும் இல்லை. எங்கள் கட்சியினர் யாருக்கு ஓட்டு போடுவர் என்பதை பகிரங்கமாகக் கூற முடியாது.

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை இன அழிப்பு போர் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி மார்ச் 6ம் தேதி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது. இதில் பங்கேற்க, அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்படும். மாணவர்களும், தொழிலாளர்கள் அதிகளவில் உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும்.தமிழகத்தில் மின்வெட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு ஏதும் வரவில்லை. மாறாக மின்வெட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது தொடர்பாகத் தான் அறிக்கைகளை அரசு வெளியிடுகிறது. கல்வி, மருத்துவம் ஆகியவை மின்வெட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டை தடுக்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கூடங்குளம் பிரச்னையில் அப்பகுதி மக்களின் அச்சத்தை முதலில் போக்க வேண்டும். பிரச்னையைத் தீர்க்க, மத்திய அரசால் மட்டுமே முடியும். நதி நீர் இணைப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறோம்.பீகார் மாநிலம் பாட்னாவில் வரும் 27ம் தேதி நடக்கவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், தமிழகத்திலிருந்து 110 பேர் பங்கேற்கிறோம்."தீவிரவாத தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்' என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் சொல்கிறார். அந்த சட்டத்தால் நிரபராதிகளும் பாதிக்கும் ஆபத்து உள்ளது. இதை கொண்டு வருவதன் மூலம், ராஜபக்ஷே ஆக நினைக்கிறார் சிதம்பரம். இச்சட்டம் கொண்டு வந்தால், மாநில அரசின் உரிமைகள் பாதிக்கப்படும்.
இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

No comments:

Post a Comment