கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி வருவதாகக் கூறப்படும் விவகாரத்தில் முக்கியத் திருப்பமாக, மத்திய உள்துறையின் விசாரணை வளையத்துக்குள் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 3 தொண்டு நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றில் 2 நிறுவனங்களின் வங்கிக் கணக்கு பரிவர்த்தனை முடக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகக் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்தப் போராட்டத்தை வழிநடத்துவோருக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி வருவதாகக் கடந்த சில வாரங்களாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மத்திய அரசும் இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியிருந்தது. போராட்டக்காரர்களுக்குத் தொண்டு நிறுவனங்களில் இருந்து நிதியுதவி வருவதாக, பிரதமர், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், மத்திய இணையமைச்சர் நாராயணசாமி ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆனால், அத் தொண்டு நிறுவனங்கள் எவை என்று அவர்கள் குறிப்பிட்டுக் கூறவில்லை. இந்த நிறுவனங்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடியில் செயல்படும் தூத்துக்குடி மறைமாவட்ட சங்கம் (Tuticorin Diocesan Association- TDA), தூத்துக்குடி பல்நோக்கு சமூக சேவை சங்கம் (Tuticorin Multi-Purpose Social Service Society- TMSSS), கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் செயல்படும் ரூரல் அப்லிப்ட் சென்டர் (Rural Uplift Centre- RUC)ஆகிய 3 தொண்டு நிறுவனங்களும் உள்துறை அமைச்சக அதிகாரிகளின் கண்காணிப்புக்குள் வந்துள்ளன.
இதில் தூத்துக்குடி மறைமாவட்ட சங்கம் மற்றும் ரூரல் அப்லிஃப்ட் சென்டர் ஆகிய 2 நிறுவனங்களின் வங்கிக் கணக்குப் பரிவர்த்தனைகளை முடக்கி உள்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த மாதம் 14-ம் தேதி இதுகுறித்து சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனப் பொறுப்பாளர்களுக்கு உள்துறை அமைச்சகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 12,13,14-ம் தேதிகளில் உள்துறை அமைச்சக அதிகாரிகள் நாகர்கோவிலில் ரூரல் அப்லிப்ட் சென்டர் அலுவலகத்தில், அந்நிறுவனம் சார்பில் கடந்த சில ஆண்டுகளில் கையாளப்பட்ட தொகைக்கான கணக்குகளையும், வங்கியில் நடந்த பணப் பரிவர்த்தனைகளையும் அத் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் தரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் ஆய்வு மேற்கொண்டனர்.
இத் தொண்டு நிறுவனம் மூலம் குமரி மாவட்டம் கீழமணக்குடி கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டித்தரப்பட்டுள்ள வீடுகளையும் அளவிட்டு, தரத்தையும் நிர்ணயித்தனர். இதுபோல் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதிகளில் இந்நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்படும் வறட்சி நிவாரணப் பணிகளையும் ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக இந்நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. மரிய ஸ்டீபன் வியாழக்கிழமை கூறியதாவது: மத்திய உள்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டது உண்மைதான். இந்த ஆய்வுக்குப் பின்னர் கடந்த மாதம் எங்கள் வங்கிக் கணக்குகளை முடக்கிவைத்துள்ளதாகத் தகவல் மட்டுமே வந்துள்ளது. இவ்வாறு கணக்குகளை முடக்கிவைத்துள்ள நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டு கடந்த மாதம் 22-ம் தேதி எங்கள் நிறுவன நிர்வாகக் குழுவினர் தில்லிக்குச் சென்று உள்துறை அதிகாரிகளிடம் நேரில் மேல்முறையீட்டு மனு அளித்துள்ளனர்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் சுனாமி நிவாரணப் பணிகள் மற்றும் பல்வேறு தொண்டுகளில் எங்கள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்கான கணக்குகள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. கூடங்குளம் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை. எவ்வித பணத்தையும் நாங்கள் அளிக்கவில்லை. விசாரணை, கணக்கு முடக்கம் என்ற பெயரில் தொண்டு நிறுவனங்கள் மீது மறைமுகத் தாக்குதல் நடத்துவதன் மூலம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது என்றார் மரிய ஸ்டீபன்.
தூத்துக்குடி மறை மாவட்ட சங்கத்தின் வங்கிக் கணக்குகளையும் மத்திய உள்துறை முடக்கியிருக்கிறது. இச் சங்கம் வெளிநாட்டு நிதியுதவி பெறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தூத்துக்குடியில இந்நிறுவன அலுவலகங்களில் சோதனை நடத்தி, கணக்கு விவரங்களைச் சரிபார்த்துச் சென்றிருந்தனர்.
இது குறித்து இச் சங்கத்தை சேர்ந்த அருள் தந்தை வில்லியம் சந்தானம் வியாழக்கிழமை கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில் மத்திய உள்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதும், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதும் உண்மை. அந்த ஆய்வில் எவ்வித தவறும் கண்டறியப்படவில்லை. ஆனாலும் கணக்குகளை முடக்கியிருக்கிறார்கள். எங்கள் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுவது குறித்து தெரியாது. இது குறித்து எந்தக் கடிதமோ, தகவலோ எங்களுக்கு வரவில்லை என்றார்.
தூத்துக்குடி பல்நோக்கு சமூகசேவை சங்க வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் குறித்து உள்துறை கண்காணித்து வருகிறது. ஆனால், கணக்குகளை முடக்கவில்லை என்று தெரிகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ள இந்த தொண்டு நிறுவனங்கள், கூடங்குளம் போராட்டத்துக்கு தாங்கள் பண உதவி அளிக்கவில்லை என்று மறுத்துள்ளன. உள்துறை அமைச்சக அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பும் தெரிவித்திருக்கின்றன.
உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கோருகிறது சி.பி.ஐ.
வெளிநாட்டு நிதிப் பரிவர்த்தனை விவகாரத்தில் சிபிஐ-யின் விசாரணை பங்களிப்பு எந்த வகையில் இருக்க வேண்டும் என தெளிவுபடுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்பேரில் தொண்டு நிறுவனங்கள் தொடர்பாக அதிகாரபூர்வமற்ற விசாரணை மட்டுமே நடந்து வருகிறது. முறைப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.
இதற்கிடையே, கூடங்குளம் அருகே உள்ள பகுதிகளில் இருந்து செயல்படும் மேலும் எட்டு தொண்டு நிறுவனங்களின் செயல்பாடு குறித்து விசாரிக்குமாறும் சிபிஐ-க்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியதாகத் தெரிகிறது.
தமிழ்நாடு தவிர நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து செயல்படும் தொண்டு நிறுவனங்களின் நிதிப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரிப்பது குறித்தும் மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
இந்த தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை கிடைத்து வருவதால் விசாரணை வளையத்துக்குள் அவற்றைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
Friday, March 2, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment