2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், பிரதமர் அலுவலக அதிகாரிகளை தொடர்புபடுத்தி அளித்த தீர்ப்பை, மறு பரிசீலனை செய்ய வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி, கடந்த 2008ல் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு, பிரதமர் அலுவலகத்திடம் இருந்து பதில் கிடைக்காததை அடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான தீர்ப்பை, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரை கொண்ட பெஞ்ச், கடந்த ஜனவரி இறுதியில் வழங்கியது.
அதில், "அரசு ஊழியர்களுக்கு எதிராக புகார்கள் பதிவு செய்யப்படுவதற்கு முன்பாகவே, அவர்கள் மீது வழக்கு தொடர அனுமதி கேட்கலாம். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எந்த ஒரு அமைச்சரையும் விசாரிக்க, பிரதமர் அலுவலகத்திடம் நேரடியாக அனுமதி கேட்கலாம். இவ்வாறு தாக்கல் செய்யப்படும் புகார்களை, பிரதமர் அலுவலகம் பரிசீலித்து, மூன்று மாதங்களுக்குள், வழக்கு தொடர்வது குறித்து அனுமதி வழங்க வேண்டும். நான்கு மாதங்களுக்குள், பிரதமர் அலுவலகத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை எனில், சம்பந்தபட்ட நபர் மீது வழக்கு தொடர, அனுமதி கிடைத்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்' என தீர்ப்பளித்தனர்.
மறு பரிசீலனை: இந்நிலையில், இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி, மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "அரசு ஊழியர்களுக்கு எதிராக புகார்கள் பதிவு செய்யப்படுவதற்கு முன்பாகவே, அவர்கள் மீது வழக்கு தொடர அனுமதி கேட்கலாம் என்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும். புகார்கள் பதிவு செய்யப்பட்டதற்கு பின்தான், வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த மனுவானது, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிரானதல்ல. சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், பிரதமர் அலுவலகம் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக, சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. அவர்கள், இந்த வழக்கில் தொடர்பு இல்லாதவர்கள். எனவே, இதில் இடம் பெற்ற சில தவறுகளை சரி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு மனு: இதற்கிடையே, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்காக, முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கை முடிவில், சுப்ரீம் கோர்ட் தலையிட்டது குறித்து கேள்வி எழுப்பி, இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரியும், ஒரு மனுவை தாக்கல் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்தோலியாவுக்கு அபராதம்: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கில், முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ராஜாவின் முன்னாள் தனிச் செயலர் ஆர்.கே.சந்தோலியா மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், "இந்த வழக்கு குறித்த, தன் குறுக்கு விசாரணைக்கு உதவும் வகையில், கடந்த 2007 மே மாதத்தில் இருந்து, 2008 டிசம்பர் வரையிலான காலத்தில், முன்னாள் அமைச்சர் ராஜா, ஆச்சர்யாவுடன் சேர்ந்து, பிரதமரை சந்தித்தது தொடர்பான ஆவணங்களை, பிரதமர் அலுவலகத்திடம் இருந்து பெற்றுத் தர வேண்டும்' என, சந்தோலியா, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எம்.எல்.மேத்தா முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "இந்த மனு ஏற்கத்தக்கதல்ல. வழக்கு விசாரணையை தாமதிக்கும் நோக்கத்தில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' எனக் கூறி, இந்த மனுவை தாக்கல் செய்ததற்காக, சந்தோலியாவுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அவகாசம் தேவை: மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக ராஜா பதவி வகித்தபோது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்காக, 122 உரிமங்கள் வழங்கப்பட்டன. சமீபத்தில், இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், இந்த 122 உரிமங்களையும் ரத்து செய்தது. புதிய ஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கைகளை, நான்கு மாதங்களுக்குள் எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "புதிதாக ஒதுக்கீடு வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். இல்லையெனில், நாடு முழுவதும் உள்ள 6.9 கோடி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர். புதிய ஒதுக்கீட்டு உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகள், ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. ஆனாலும், இந்த நடவடிக்கைகள் முழுமை பெற, குறைந்தது 400 நாட்களாவது தேவைப்படும். எனவே, கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்' என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, March 2, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment