சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியால் பிரதமர் மன்மோகன் சிங்கை மாற்றும் எண்ணமில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மிகவும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருப்பது அக்கட்சியினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள தலைவர்களை சோனியா தனித்தனியாக சந்தித்து தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தவறான வேட்பாளர் தேர்வு: முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தவறான வேட்பாளர்களைத் தேர்வு செய்தது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது. அதே போல ஏராளமான தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டது, ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் ஆகியவையும் தோல்விக்குக் காரணம். இது தொடர்பாக ராகுல் காந்தியும் ஏற்கெனவே விளக்கமளித்துள்ளார்.
மத்திய அரசுக்கு பாதிப்பு இல்லை: இந்தத் தேர்தல் தோல்வி மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தேர்தல் தோல்வி கட்சிக்குப் பாடமாக அமைந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசிக்க இருக்கிறேன். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்ததைவிட குறைவாகவே மக்கள் ஆதரவைப் பெற முடிந்துள்ளது. இதனைப் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம் என்றார்.
தொண்டர்களுக்கு வேண்டுகோள்: இத்தேர்தல் தோல்வி தந்த அதிர்ச்சியில் இருந்து கட்சித் தொண்டர்கள் உடனடியாக மீள வேண்டும். ஏனெனில் இந்த ஆண்டில் குஜராத், இமாசலப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டில் கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. 2014-ம் ஆண்டில் மக்களவை பொதுத் தேர்தலும் வர இருக்கிறது.
2014-ல் பிரதமர் வேட்பாளர் யார்? இந்தத் தோல்வியால் பிரதமர் மன்மோகன் சிங்கை மாற்றும் கேள்வியே எழவில்லை என்று ஒரு கேள்விக்கு சோனியா பதிலளித்தார். இதையடுத்து 2014-ம் ஆண்டில் காங்கிரஸ் சார்பில் யார் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு, "இப்போது 2012-ம் ஆண்டுதான் நடைபெறுகிறது. 2014-ம் ஆண்டுக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது' என்று சோனியா பதிலளித்தார்.
தலைவர்களால்தான் பிரச்னை: உத்தரப் பிரதேச தேர்தலில் காங்கிரஸை வழிநடத்த சரியான தலைவர்கள் இல்லாததுதான் தோல்விக்குக் காரணம் என்று கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு, "தலைவர்கள் இல்லை என்பதைவிட, அதிகமான தலைவர்கள் இருந்தார்கள் என்பதுதான் எங்கள் கட்சியில் பிரச்னை. தேர்தல் பிரசாரத்தின் போது சில தலைவர்களின் பேச்சால் எழுந்த சர்ச்சைகள் எனது கவனத்துக்கு வந்தன. ஆனால் அந்தத் தலைவர்கள் தங்கள் நிலைப்பாடு குறித்து விளக்கமளித்து விட்டனர்'.
விலைவாசி உயர்வும் தோல்விக்குக் காரணம்? அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வும் உத்தரப் பிரதேச தேர்தலில் எதிரொலித்ததாகக் கருதுகிறீர்களா என்று கேட்டபோது, "ஒருவேளை, அதுவும் கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தார்கள். அந்தக் கட்சிக்கு மாற்றாக சமாஜவாதி கட்சியைத் தேர்வு செய்துவிட்டனர்' என்று சோனியா கூறினார்.
பஞ்சாப் தோல்வி: பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து கருத்துத் தெரிவித்த அவர், "மன்பிரீத் பாலின் மக்கள் கட்சியால் சுமார் 23 இடங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டது. அகாலி தளம் கட்சியின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். தேர்தலின் போது மாநில பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் கடுமையாக உழைத்தார்கள். எனினும் தோல்வி குறித்து ஆராயும்போது மாநிலப் பொறுப்பாளர்கள் பணியாற்றிய விதம் உள்பட அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொள்வோம்.
ஊழல் குற்றச்சாட்டுகள்: மத்திய அரசு மீது எழுந்த 2ஜி உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளும் தோல்விக்குக் காரணம் என்று எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு கடுமையாக மறுப்புத் தெரிவித்த சோனியா, "ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போல வேறு எந்தக் கட்சியும் இதுவரை நடவடிக்கை எடுத்தது இல்லை.
லோக் பால் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியது நாங்கள்தான். அதனை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் செய்தது எதிர்க்கட்சிதான் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.
Thursday, March 8, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment