flashvortex.

Thursday, March 8, 2012

இலங்கை அரசியற் பிரமுகர்கள் அடிக்கடி தமிழகம் வருவதை மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது : ஜெயலலிதா

இலங்கையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களின் தமிழகப் பயணம் குறித்து மாநில அரசிடம் கலந்து ஆலோசித்த பிறகே அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, புதன்கிழமை அவர் எழுதிய கடிதத்தின் விவரம்:

 இலங்கையில் உள்ள தமிழர்களையும் அவர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கும் விஷயத்திலும் அந்த நாட்டு அரசு நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து தமிழக மக்கள் மனம் வெதும்பிப் போய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இலங்கைத் தமிழர்கள் கௌரவமாகவும், சுயமரியாதையோடும், சம அரசியல் அந்தஸ்தோடும் வாழ்வதை உறுதி செய்ய அந்த நாட்டு அரசு தவறி விட்டதாக இங்குள்ள மக்கள் கருதுகின்றனர்.

 இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாமல் இலங்கையின் வி.ஐ.பி.க்களும் இதர பிரமுகர்களும் தனிப்பட்ட பயணமாக இங்கு வருகின்றனர்.

 இதுபோன்ற ஒரு பயணமாக, இலங்கை அதிபரின் உறவினர் திருக்குமரன் நடேசன் கடந்த ஜனவரி 9-ம் தேதி ராமேசுவரம் வந்தார். அப்போது, அவர் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றது.

 அவருடைய பயணம் குறித்து தமிழக அரசுக்கு இலங்கை அரசோ அல்லது இந்திய அரசோ எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால், அவருக்கு போதிய பாதுகாப்பை அளிக்க முடியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக, தென்னிந்தியாவுக்கான இலங்கையின் துணைத் தூதரக அதிகாரி, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

 மேலும், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளரும் கடிதம் அனுப்பியுள்ளார். இந்தக் கடிதங்களில் உள்ள வாசகங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. நியாயமற்றவை.

 மாநில அரசுக்குத் தெரியாமல் இலங்கையின் உயரதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் மற்றும் வி.ஐ.பி.க்களும் அடிக்கடி தமிழகம் வருகின்றனர். இது, மாநில அரசுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து, இந்திய வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

 இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க இலங்கையின் முக்கிய பிரமுகர்களின் தமிழக பயணம் குறித்த விவரங்களை முன்கூடியே மாநில அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும். சில முக்கிய பிரமுகர்களின் பயணங்களை மாநில அரசுடன் ஆலோசித்த பிறகே மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment