flashvortex.

Sunday, March 11, 2012

சட்டம், ஒழுங்கை பேணிக் காக்க முக்கியத்துவம் கொடுப்பேன்: அகிலேஷ் யாதவ் பேட்டி

உ.பி., மாநிலத்தில் எனது தலைமையில் அமையும் புதிய அரசு, சட்டம், ஒழுங்கை பேணிக் காக்க அதிக முக்கியத்துவம் அளிக்கும்,'' என, அகிலேஷ் யாதவ் கூறினார்.

முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பின், நிருபர்களிடம் பேசிய அகிலேஷ் மேலும் கூறியதாவது: எனது தலைமையிலான அரசு, ஜாதி மற்றும் மத அடிப்படையில், எந்த பாகுபாடும் காட்டாது. மாவட்டங்களில் நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்படுவர். தங்களின் கடமையைச் செய்யாத அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் யாரும் தப்ப முடியாது. கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்படும். மாயாவதி அரசால் கட்டப்பட்ட நினைவிடங்களில் உள்ள காலியிடங்கள் எல்லாம், மருத்துவ மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்க பயன்படுத்தப்படும். முலாயம் சிங் தொடர்ந்து தேசிய அரசியலிலும், மாநில அரசியலிலும் தீவிரமாக ஈடுபடுவார். அவரின் ஆசியோடு மாநில அரசு நடைபெறும். அமைச்சரவை தொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும், அது பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்படும். அதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை. இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.
பொறியியல் பட்டதாரி: முலாயம் சிங் யாதவ், மால்தி தேவிக்கு முதல் மகனாக 1973 ஜூலை 1ம் தேதி பிறந்த அகிலேஷ் யாதவ், ராஜஸ்தான் மாநிலம் டோல்பூரில் உள்ள ராணுவப் பள்ளியில் படித்தார். பின்னர் மைசூர் பல்கலைக் கழகத்தில், சிவில் சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றார். ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக் கழகத்தில், சுற்றுச்சூழல் பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றார். கடந்த 1999ம் ஆண்டு, டிம்பிள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அகிலேஷ் யாதவ், கால்பந்து விளையாடுவதிலும், ரசிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். கடந்த 2000ம் ஆண்டு, அதாவது 27வது வயதில் அரசியலில் நுழைந்த அகிலேஷ் யாதவ், கன்னவ்ஜி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.,யானார். அது முதல் எம்.பி.,யாக இருக்கிறார். இம்முறை நடந்த சட்டசபைத் தேர்தலின் போது, கட்சியினருக்கு தேர்தலில் போட்டியிட "சீட்' வழங்குவது, கட்சியின் பிரசாரங்களை கவனிப்பது உட்பட பல பொறுப்புகளை கவனித்ததோடு, தீவிர பிரசாரமும் செய்து, கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளார்.

No comments:

Post a Comment