flashvortex.

Sunday, March 11, 2012

நிதியுதவி செய்யவில்லை: மத்திய அரசு மீது மம்தா மீண்டும் குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்துக்குத் தேவையான நிதியுதவியை மத்திய அரசு அளிக்கவில்லை என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

 கொல்கத்தாவில் சனிக்கிழமை, குழந்தைகளுக்கான மருத்துவமனையை அவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்தது:

 கடந்த 35 ஆண்டுகாலமாக மேற்குவங்கத்தை ஆண்ட இடதுசாரி கூட்டணியினர் மாநிலத்தை பெரும் கடனில் மூழ்கடித்து, நிதிநிலையை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டனர். இப்போது மேற்குவங்கம் கடனில்தான் மூழ்கியுள்ளது.
 எதையாவது ஏலத்தில் விட்டு மாநில அரசுக்கு நிதி திரட்டலாம் என்று யோசித்தால், அதற்குக் கூட ஒன்றும் மிச்சமில்லை.

 மாநில அரசுக்குக்காக மத்திய அரசு ஒரு பைசாவைக் கூட தரவில்லை. மத்திய அரசின் நிதி உதவி எதுவும் இல்லாமல் இப்படிப்பட்ட மாநில அரசை எப்படி நடத்த முடியும்.

 ஏற்கெனவே வாங்கியுள்ள கடனுக்காக மேற்கு வங்க மாநில கருவூலங்களில் இருந்து ரூ.22 ஆயிரம் கோடி ரூபாய் வரை மத்திய அரசு எடுத்துக் கொண்டுள்ளது.

 மேற்குவங்கத்தின் வருவாயே சுமார் ரூ.21 ஆயிரம் கோடிதான். இந் நிலையில் அரசை நடத்தவும், மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ளவும் தேவையான நிதி ஆதாரத்துக்கு எங்கே செல்ல முடியும்?

 நினைப்பதையெல்லாம் நானே நிறைவேற்றிக் கொள்ள நான் என்ன கடவுளா? மாதம்தோறும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதே பெரும் நெருக்கடியாகத்தான் உள்ளது என்று மம்தா

 கூறினார்.

 தொடர்ந்து மாநில அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் இறக்கும் சம்பவங்கள் குறித்துப் பேசிய அவர், "இதுபோன்ற சம்பவங்கள் குறிப்பிட்ட சில தவறான நோக்கங்களுக்காக பெரிதுபடுத்தப்படுகின்றன. பொதுவாக அரசு மருத்துவனைகளில் எப்போதும் கூட்டம் இருக்கும்.

 பெரும்பாலும் ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக கர்ப்பிணிகளும், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளும் இறந்துவிடுகின்றனர்.

 இதனைத் தடுக்க மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

 நவீன வசதிகளுடன் புதிதாக 27 மருத்துவமனைகள் கட்டப்படவுள்ளன. கடந்த 9 மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 700 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 டாக்டர்கள், செவிலியர்கள் தட்டுப்பாட்டைப் போக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் மம்தா.

No comments:

Post a Comment