flashvortex.

Thursday, March 8, 2012

இந்தியாவின் மெளனம் எப்போது கலைக்கப்படும்?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் சிறீலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதா? இல்லை? என்பது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர். இதைப் போருக்குப் பிந்தைய கள ஆய்வில் ஈடுபட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய பிரதிநிதிகள் உறுதிசெய்தனர்.

இதையடுத்து போரின்போது, அப்பாவி மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறப்பட்டதாகவும் போர்க்குற்றம் புரிந்தவர்களைச் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் குழு அறிக்கை அளித்தது.
இதன் தொடர்ச்சியாக சிறீலங்காவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை உள்ளிட்ட நெருக்கடிகளைக் கொடுக்க அமெரிக்கா, நோர்வே, பிரான்ஸ் ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ளன. ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக மற்ற உறுப்பு நாடுகளுடனும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிறீலங்காவிற்கு எதிரான கண்டனத்தை ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் மத்திய அரசு பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சார்பில் குரல் கொடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட ஒரு நாட்டைப் பாதிக்கும் வகையில் தீர்மானம் கொண்டு வந்தாலோ, நெருக்கடியோ கொடுத்தாலோ, அது அந்த நாட்டுக்கு எந்தப் பலனையும் கொடுக்காது. மாறாக, மேலும் பிரச்னைகளுக்கும் சிக்கல்களுக்கும் சம்பந்தப்பட்ட நாடு உள்ளாகும் என இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

போருக்கு பிந்தைய சிறீலங்காவின் அபிவிருத்தி நிலைமையை ஆய்வு செய்த குழுவின் அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் குழு புதன்கிழமை பரிசீலித்தது. அப்போது, ஆய்வுக்குழு அறிக்கையின்படி, போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் மீது சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்கா சார்பில் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

ஜெனீவாவில் மார்ச் 23-ம் திகதி வரை ஐ.நா மனித உரிமைகள் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அதில் விவாதிக்கப்படும் பல்வேறு உலக விவகாரங்கள் தொடர்பாக, மார்ச் 22-ம் திகதி மாலையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதற்குள் இலங்கை விவகாரத்தில் இந்தியா என்ன நிலையை எடுக்கும் என்று உலக நாடுகள் மட்டுமின்றி இந்திய அரசியல் கட்சிகளும் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளன

No comments:

Post a Comment