flashvortex.

Tuesday, March 6, 2012

மத்திய - மாநில அரசு உறவுகள் குறித்து விவாதம் தேவை

மத்திய, மாநில அரசு உறவுகள் குறித்து லோக் சபாவில் உடனடியாக விவாதம் நடத்த வேண்டும். மாநில அரசுகளின் பல்வேறு உரிமைகள் மத்திய அரசால் பறிக்கப்படும் நிலைமைகள் அண்மைக் காலத்தில் அதிகரித்து வந்துள்ளன. மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி ஆதராங்களும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன'' என்று அதிமுகவின் பார்லிமென்ட் கட்சியின் தலைவர் தம்பிதுரை, சபாநாயகர் மீராகுமார் நேற்று நடத்திய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். ""மாநில அரசுகளின் உரிமைகளைப் பாதிக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும், திமுக ஆதரவு தராது'' என்று அந்தக் கட்சியின் பார்லிமென்ட் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
பார்லிமென்ட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த வாரம் துவங்கும் நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை, நேற்று மதியம் சபாநாயகர் மீராகுமார் கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் லோக் சபா காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரணாப் முகர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர்கள் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ். பாசுதேவ் ஆச்சார்யா, குருதாஸ் தாஸ்குப்தா, டி.ஆர்.பாலு, தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய தம்பிதுரை கூறியதாவது: தீவிரவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்த திட்டம், மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் வகையில் இருந்ததால், 11 மாநில முதலமைச்சர்கள் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று குரல் கொடுத்தனர்.
இமாலய நதிகளை தீபகற்ப நதிகளோடு இணைப்பதற்கு, காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகள் முன்வராத நிலையில், சுப்ரீம் கோர்ட் இந்த நதிகளை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மத்தியில் ஆளும் பல்வேறு அரசுகள் 40 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளன. இந்த நதிகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாக இருப்பதால், சிறப்புத் திட்டம் ஒன்றை மத்திய அரசு தரவேண்டும் என்று தமிழக முதலமைச்சர், மத்திய அரசுக்கு பல மாதங்களுக்கு முன்னர் கோரிக்கை வைத்தார். ஆனால், மத்திய அரசு இந்தக் கோரிக்கை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. "தானே' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரண வேலைகள் நடத்த மத்திய நிதி உதவியை தமிழக அரசு கோரியிருந்தது. ஆனால், மத்திய அரசோ ரூ.500 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.இலங்கையில் 2009ல் நடந்த போரின் முடிவில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது குறித்து, இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில், அமெரிக்க அரசு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும். கச்சத்தீவை இலங்கை அரசிடமிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தம்பிதுரை கூறினார்.

திமுக பார்லிமென்ட் தலைவர் வெளியிட்ட பத்திரிகை குறிப்பில், திமுக உறுப்பினர்கள் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்தும், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள் குறித்தும் பார்லிமென்டின் இரு அவைகளிலும் எழுப்பத் திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசு காவேரி, முல்லைப்பெரியாறு போன்ற நதி நீர் பிரச்னைகளைத் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கச்சத்தீவு அருகே, தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். மாநில சுயாட்சி குறித்து விவாதம் நடத்த, திமுக உறுப்பினர்கள் கோரிக்கை வைக்கவுள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment