flashvortex.

Thursday, March 1, 2012

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த பணப்பரிமாற்றம்: பெர்முடா நாட்டு உதவி கோரி சி.பி.ஐ., கடிதம்

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக, பெருமளவில் நடந்துள்ள பணப் பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த உதவி கோரி, பெர்முடா, இங்கிலாந்து நாடுகளிலுள்ள புலனாய்வு நிறுவனங்களுக்கு, அந்நாடுகளின் தூதரகங்கள் மூலம், சி.பி.ஐ., கடிதம் அனுப்ப உள்ளது.

ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி, நெருக்கடி கொடுத்ததாக, ஏர்செல் முன்னாள் தலைவர் சிவசங்கரன் சி.பி.ஐ.,யில் புகார் தெரிவித்திருந்தார். விசாரணை நடத்திய சி.பி.ஐ., தயாநிதிக்கு எதிராக நடவடிக்கைகளை துவக்கியது. ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்றதன் மூலம், பெருமளவிலான பணம், தயாநிதிக்கு கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றியும் சி.பி.ஐ., விரிவாக விசாரணை நடத்தியது. இருப்பினும், பணப் பரிமாற்றத்தில் பல நாடுகளின் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், அந்நாடுகளின் உதவியைப் பெறுவதில், சர்வதேச சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, கோர்ட் வாயிலாக அனுமதிக் கடிதம் அனுப்ப வேண்டியுள்ளது.

இந்த விவகாரத்தில், கைமாறிய பணம், பெர்முடா, இங்கிலாந்து நாடுகள் வழியாக மலேசியா, மொரீஷியஸ் நாட்டிலுள்ள நிறுவனங்கள் மூலம், இந்தியாவில் உள்ள அந்நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு இருப்பது, விசாரணையில் தெரியவந்தது. மேற்கண்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களிடம் விசாரணை நடத்த வேண்டுமெனில், அந்நாடுகள் சம்பந்தப்பட்ட தூதரகங்கள் வழியாக, கோர்ட் அனுமதியுடன் கடிதம் அனுப்ப வேண்டியிருந்தது. இதற்கான பணிகளை, மேற்கண்ட சி.பி.ஐ., அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் முடித்துவிட்டது. இதையடுத்து, இம்மாதம் முதல் வாரத்தில், சி.பி.ஐ.,யின் வெளிநாட்டு பணப் பரிமாற்றப் பிரிவு பெர்முடா, இங்கிலாந்து, மொரீஷியஸ், மலேசியா ஆகிய நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் உதவி கேட்டு, தூதரகங்கள் வழியாக கடிதம் அனுப்பவுள்ளது.

No comments:

Post a Comment