பலராலும் எதிர்பார்க்கப்பட்ட சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று உத்தியோகபூவமாக வெளியிட்டு சிறீலங்காவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
அமெரிக்காவின் அதிர்ச்சி வைத்தியத்தினை சற்றும் எதிர்பாராத சிறீலங்கா அமைச்சர்கள் ஜெனிவா நோக்கி தலைதெறிக்க ஓட ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்காவின் குறித்த தீர்மான வரைபு இம்மாத நடுப்பகுதியிலேயே பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா நம்பியிருந்தது. ஆனால் ஒருவாரம் முன்னதாகவே இந்தத் தீர்மான வரைபு நேற்று பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத சிறீலங்கா, ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா குழுவைப் பலப்படுத்தும் அவசர நடவடிக்கைகளில் மும்முரமாக செயற்பட ஆரம்பித்துள்ளது.
ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்று விட்டு டுபாய் திரும்பிய முன்னாள் சட்டமா அதிபரும், சிறிலங்கா அதிபரின் சட்டஆலோசகருமான மொகான் பீரிஸ் உடனடியாக ஜெனிவா செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஜெனிவாவில் இருந்து புறப்பட்டு குறுகிய காலத்துக்குள் திரும்பவும் ஜெனிவா செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் சட்டவாளர் காலிங்க இந்ததிஸ்ஸ, அலி சப்ரி ஆகியோரை நேற்றிரவு ஜெனிவா செல்வதற்கு இணங்க வைக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
இம்மாத நடுப்பகுதிலேயே அமெரிக்காவின் தீர்மானம் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்த்து சிறிலங்கா தனது பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்களை கொழும்புக்கு திருப்பி அழைத்து விட்டது.
குறிப்பாக சிறிலங்கா அதிபரின் சிறப்புத் தூதுவரும், ஜெனிவா குழுவுக்கான தலைவருமான அமைச்சர் மகிந்த சமரசிங்க கொழும்பு திரும்பி, தேயிலை மாநாடு ஒன்றில் பங்கேற்க ஜப்பான் சென்று விட்டார்.
அவர் மீண்டும் வரும் 14ம் நாளே ஜெனிவா திரும்பத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் இப்போது அவர் ஜப்பானிய பயணத்தை இடையிலேயே, முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பி, முன்கூட்டியே ஜெனிவா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவரே அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பதிலுரை நிகழ்த்தவுள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிசும் ஜெனிவா செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் தீர்மான வரைபில் திருத்தங்களை செய்யும் வாய்ப்பு உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படும் என்பதால், தீர்மானத்தை தோற்கடிக்க முடியாது போனாலும், அதன் தீவிரத்தன்மையைக் குறைக்க சிறிலங்கா முனையும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதேவேளை, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகள் ஒப்பமிட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
Thursday, March 8, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment