சிறீலங்கா மீது பல்வேறு முனைகளில் அழுத்தங்களைப் பிரயோகித்துவரும் அமெரிக்கா, மற்றுமொரு அதிர்ச்சி வைத்தியத்தை ராஜபக்ச நிர்வாகத்துக்கு அளித்துள்ளது. இது, தொடர்பாக தெரியவருவதாவது, சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புரெனிஸ் விரைவில், கொழும்பிலிருந்து மாற்றலாகிச் செல்லவுள்ளதாக உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
விரைவில் சிறிலங்காவில் இருந்து மாற்றலாகிச் செல்லவுள்ள புரெனிசுக்குப் பதிலாக மைக்கல் ஜே.சிசன் [Michele J. Sison] கொழும்பில் பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார். அமெரிக்க சிறிலங்கா உறவுகள் பலவீனமான கட்டத்தை அடைந்திருந்த சூழலில் பற்றிசியா புரெனிஸ் சிறிலங்காவில் தூதுவராகப் பணியாற்றியுள்ளார்.
சிறிலங்காவுடனான உறவுகள் தற்போது இறுக்கமான நிலையிலேயே இருப்பதாக அவர் சில நாட்களுக்கு முன்னதாக தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தூதுவரை நியமிப்பதற்கான அதிகாரபூர்வ அறிவித்தலை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பியுள்ளது.
இதனை சிறிலங்கா அரசாங்கம் அங்கீகரித்த பின்னர் சிசன் கொழும்புக்கான தூதுவராக நியமிக்கப்படுவார்.
அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரான மைக்கல் ஜே சிசன் முன்னர் ஈராக் தலைநகர் பாக்தாதில் அமெரிக்க துணைத் தூதுவராகவும், லெபனான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் அமெரிக்கத் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் சென்னையில் 1996 தொடக்கம் 99 வரையிலும், இஸ்லாமாபாத்தில் 1999 தொடக்கம் 2000 வரையிலும் இவர் தூதரக பொறுப்பதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
அதைவிட ஐவரிகோஸ்ட், கெமரூன், பெனின், டோகோ, ஹெய்ற்றி ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களிலும் பணியாற்றியுள்ளார்.
இவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், சிறிலங்கா, இந்தியா ஆகிய நாடுகளுடனான உறவுகள் குறித்த கொள்கைகளை தீர்மானிக்கும் இராஜாங்கத் திணைக்களதின் தெற்காசிய விவகாரப் பிரிவில் முதன்மை பிரதி உதவிச் செயலராகவும் பணியாற்றியுள்ளார்.
சிறிலங்காவுடனான உறவுகள் நெருக்கடியான கட்டத்தை அடைந்துள்ள சூழலில், அமெரிக்கா தனது மூத்த இராஜதந்திரியும், முரண்பாட்டுச் சூழல் நிலவிய நாடுகளில் கடுமையான சவால்களை எதிர்கொண்டு பணியாற்றிய அனுபவம் மிக்க மைக்கல் ஜே சிசனை கொழும்புக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. |
No comments:
Post a Comment