flashvortex.

Wednesday, March 14, 2012

5000 கோடி ரூபாய் வருவாய் தேட புதுமை படைக்குமா ரயில்வே பட்ஜெட்?

பார்லிமென்டில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டில், உயர் வகுப்பு பயணிகளுக்கு பாதுகாப்பு வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் கட்டண உயர்வு இருக்காது என்றாலும், இதன் மூலம் 5000 கோடி ரூபாய் வருவாய் தேட வழிகாணப்படும். புதிய ரயில்கள் ஏதும் இருக்காது. மாறாக, ரயில் அடிப்படைக் கட்டமைப்புகள் சீராக சில திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி, ரயில்வே பட்ஜெட்டை இன்று பார்லிமென்டில் தாக்கல் செய்கிறார். கடந்த சில ஆண்டுகளாக, ரயில்வே துறையில் பெரும் நிதி நெருக்கடி நிலவுகிறது. முன்பு ரயில்வே அமைச்சராக மம்தா அறிவித்த பட்ஜெட் திட்டங்கள் வெறும் அறிவிப்புடனே இருக்கிறது.ஆனால், ரயில்வே தன் இயல்பான செயலாக்கத்திற்கு, தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. மத்திய பட்ஜெட் மூலம் அதில் பாதி மட்டுமே வரும் என்ற நிலையில், புதிய ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி இல்லாததால், ரயில்வே துறை திணறி வருகிறது.தற்போதுள்ள நிதி தேவையை சமாளிக்கும் வகையில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படாமல் உள்ள ரயில்வே கட்டணத்தை, இந்த பட்ஜெட்டில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, முதலில் தகவல் வெளியானது.இதை "அசோசெம்' உட்பட பல தொழில்துறை அமைப்புகள் ஆதரித்தன. ஆனாலும், ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி, திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், ரயில் கட்டணத்தை உயர்த்தாமல், மம்தா கட்டளைப்படி நடப்பார் என்பது உறுதி .

பாதுகாப்பு வரி:எனவே, ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல், வருவாயைப் பெருக்கி, நிதிச் சிக்கலை ஓரளவு சமாளிக்க ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி முன் வரலாம். இதன் ஒரு பகுதியாக, கட்டண உயர்வுக்குப் பதிலாக, ரயில் பயண பாதுகாப்பு வரி என்ற பெயரில், சிறிய அளவிலான வரியை விதித்து, அதன் மூலம் வருவாயை அதிகரிக்க, அவர் முடிவு செய்துள்ளார்.ககோத்கர் கமிட்டி அளித்த பரிந்துரைகளின்படி, இந்த பாதுகாப்பு வரியை அமல்படுத்த, அவர் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. ரயிலில் பயணம் செய்யும் "ஏசி'மற்றும் <முதல்வகுப்பு பயணக் கட்டணங்களில் " செஸ்' எனப்படும் இக் கட்டணம் மூலம் 5000 கோடி ரூபாய் வரை திரட்டப்படலாம் என்று கூறப்படுகிறது. சரக்கு கட்டணம் கடந்த 6ம் தேதி உயர்த்தப்பட்டுள்ளதால், இன்றைய பட்ஜெட்டில் சரக்கு கட்டணத்தில் மாற்றம் எதுவும் இருக்காது.

வணிக மயம்:ரயில்வே துறையின் மிகப் பெரிய செலவுகளில் ஒன்றாக, டீசல் செலவு உள்ளதால், அதை குறைக்கும் நடவடிக்கைகள், இந்த பட்ஜெட்டில் மேற்கொள்ளப்படலாம். ரயில்வே ஸ்டேஷன்களை வணிகமயமாக்குவதன் மூலமும், வருவாயைப் பெருக்கும் திட்டமும் உள்ளது.

அமைச்சர்களால் சலுகை:கர்நாடகாவின் கோலார், குஜராத்தின் கட்ச் ஆகிய பகுதிகளில், ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைப்பது குறித்த அறிவிப்பும்,பட்ஜெட்டில் வெளியாகலாம். கர்நாடகாவைச் சேர்ந்த முனியப்பாவும், குஜராத்தை சேர்ந்த பாரத்சிங் சோலங்கியும், ரயில்வே இணை அமைச்சர்களாக இருப்பதால், அந்த மாநிலங்களுக்கு இந்தச் சலுகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ரயில் கட்டணம் உயர்த்தப்படுமா என ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியிடம் கேட்டபோது, "நாளை தான் (இன்று) ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதுகுறித்து முன்கூட்டியே தகவல்தெரிவிக்க முடியாது' என்றார்.

முடங்கிப் போன பணிகள் :ஏற்கனவே கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்த சில திட்டங்கள் சிறிதும் வளர்ச்சி இன்றி முடங்கியுள்ளன.நாடு முழுவதும் 129 புதிய ரயில்பாதைகள் அமைக்கப்படுவதாக கூறப்பட்டது. இதில் 45 மீட்டர் கேஜ் பாதை, அகலரயில் பாதைகளாக்கும் திட்டமாகும். இரட்டை அகல ரயில் பாதைகள் அமைக்கும் பணி 166 இதில் இடம் பெற்றிருந்தது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 1,100 கோடி ரூபாய் மட்டுமே. அதாவது மொத்த தேவையில் 15 சதவீதம். அப்படிப்பார்த்தால் இதே வேகத்தில் இத்திட்டங்கள் நிறைவேற இன்னமும் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதற்குள் இத்திட்ட செலவினம் அதிகரிக்கும்.மேலும் ரயில்வேயில் உள்ள மொத்தப் பணியாளர்கள்எண்ணிக்கை 14 லட்சம் பேர். தற்போது எடுத்த கணக்கெடுப்பில்"சி' மற்றும் " டி' பணியாளர் பற்றாக்குறை 1.75 லட்சம் பேர். இவர்கள் அனைவரும் ரயில்வே பாதுகாப்பு விஷயத்தில் ஈடுபடுத்தப்படும் பொறுப்பை உடையவர்கள். இவர்கள் பணியமர்த்தப்பட்டனரா,நிலவரம் என்ன என்பதும் புதிராக உள்ளது.

No comments:

Post a Comment