ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறையாக அமைந்த பின், தமிழகத்துக்கு சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கு முதன்முறையாக, நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மதுரை - ராமநாதபுரம் மற்றும் விக்கிரவாண்டி - மீன்சுருட்டி இடையேயான தேசிய நெடுஞ்சாலைகள், நான்கு வழிச் சாலைகளாக மாற்றப்படவுள்ளன. தனியார் பங்களிப்புடன் மொத்தம் 2,200 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சியில், எண்ணற்ற சாலைத் திட்டங்கள் தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்டு பெருமளவு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டன. ஆனால், இரண்டாவது முறையாக மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அமைந்த பின், சாலைத் திட்டங்கள் தமிழகத்திற்கு அரிதாகிவிட்டன என்பதை விட, சுத்தமாக இல்லவே இல்லாமல் இருந்தன. ஒவ்வொரு முறை கட்டுமானத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நடைபெறும் போதெல்லாம், பிற மாநிலங்களுக்கு பெருமளவு திட்டங்கள் ஒப்புதல் வழங்கப்படும்; பெரிய அளவில் நிதியும் ஒதுக்கீடு செயயப்படும். ஆனால், தமிழகத்துக்கான சாலைத் திட்டங்களோ, அவற்றிற்கு நிதி ஒதுக்கீடோ இருக்காது.
இரு திட்டங்களுக்கு ஒதுக்கீடு: இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின், இரண்டு சாலைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் கூட, கடந்த ஆட்சியிலேயே அனுமதிக்கப்பட்ட திட்டங்களாகும். இவற்றிற்கு இப்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள மதுரை - ராமநாதபுரம் இடையேயான சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றும் திட்டத்திற்கு, 828 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், 115 கி.மீ., தூரமுள்ள இந்த இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் பாதியாகக் குறையும். மதுரை - ராமேஸ்வரம் இடையில் இந்த சாலை அமைவதால், மேலும் பலனளிக்கும். இந்தச் சாலை மதுரை, சிலைமான், திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை, பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஊர்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
மற்றொரு திட்டம் என்ன? அதேபோல, மற்றறொரு திட்டமாக விழுப்புரம் - தஞ்சாவூர் மார்க்கத்தில் உள்ள விக்கிரவாண்டி - மீன்சுருட்டி இடையேயான நான்கு வழிச் சாலை திட்டத்திற்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற 1,402 கோடி ரூபாய் வரை செலவிடப்படும். இந்த நிதி ஒதுக்கீட்டை செய்துள்ள மத்திய அரசு, திட்டம் நிறைவேற்றப்பட்டால், விழுப்புரம் - தஞ்சாவூர் இடையே போக்குவரத்து மேம்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த நான்கு வழிச் சாலையால் விழுப்புரம், கடலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகியவை பயனடையும். இந்த நான்கு வழிச் சாலைத் திட்டங்கள் இரண்டுமே தனியார் பங்களிப்புடன் சேர்ந்து நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Friday, March 2, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment