பட்ஜெட்டில் உற்பத்தி மற்றும் சேவை வரிகள் உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக, கம்பி விலை டன்னுக்கு 1,000 ரூபாயும், சிமென்ட் விலை மூட்டைக்கு 15 ரூபாயும் உயருகிறது. ஓரிரு நாட்களில் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வரும் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பல்வேறு பொருள்களுக்கான உற்பத்தி வரி 10லிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல சேவை வரியும் 10லிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி விகித உயர்வு காரணமாக கட்டுமான துறையின் அத்தியாவசிய பொருட்களான கம்பி மற்றும் சிமென்டின் விலை உடனடியாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கட்டுமான துறையினர் தெரிவித்தனர்.
கம்பி நீட்டும் கம்பி: மின்சாரம், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக கம்பி விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இப்போதைய நிலையில் பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகள் ஒரு டன் 52,000 ரூபாயாக உள்ளது. சிறிய நிறுவனங்களின் டி.எம்.டி., கம்பிகள் விலை ஒரு டன் 54,000 ரூபாயாக இருந்து வருகிறது. இது குறித்து, கம்பி வியாபாரத்தில் முன்னிலை நிறுவனமான, திருச்சி டிரேடிங் கார்பரேஷன் நிறுவனத்தின், நிர்வாகி, முருகன் குறுகையில்,"உற்பத்தி வரி உயர்வு காரணமாக ஒரு டன்னுக்கு குறைந்தபட்சம் 1,000 ரூபாய் வரை அதிகரிக்கும். நிலக்கரி போன்றவற்றுக்கு ஆகும் கூடுதல் செலவை கணக்கிட்டால் இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றார். இந்த விலை உயர்வை உடனடியாக அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வார்ப்பாலைகள் எடுத்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இரு வகை வரி: பெரிய ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் சிமென்ட்டுக்கு ஒரு டன்னுக்கு 12 சதவீதம் மற்றும் 120 ரூபாய் என, உற்பத்தி வரி விதிக்கப்படும். இதேபோல, சிறிய ஆலைகளின் தயாரிப்புகளுக்கு டன்னுக்கு ஆறு சதவீதம் மற்றும் 120 ரூபாய் என்ற அளவில் உற்பத்தி வரி விதிக்கப்படும். இப்போதைய நிலையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஒரு மூட்டை சிமென்ட் விலை 315 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உற்பத்தி மற்றும் சேவை வரி உயர்வு காரணமாக ஒரு மூட்டைக்கு மேலும் 15 ரூபாய் அதிகரிக்கும் என, தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஒரு மூட்டை சிமென்ட் விலையை 330 ரூபாயாக அதிகரிக்க உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், இந்த விலை உயர்வை உடனடியாக அமல்படுத்தவும் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும், ஓரிரு நாட்களில் சிமென்ட் விலை உயர்த்தப்படும் என, உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
Saturday, March 17, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment