flashvortex.

Saturday, March 17, 2012

வளர்ச்சியை அதிகரிக்க ஐந்து அம்ச திட்டம்: மத்திய பட்ஜெட்டில் பிரணாப் தகவல்

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் என்பது கீழிறங்கிக் கிடக்கிறது. இதை மீண்டும் அதிகரிப்பதற்காக ஐந்து அம்ச திட்டத்தை, மத்திய அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.

அதன்படி, உள்நாட்டுக்குள்ளேயே தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நடவடிக்கை எடுப்பது, அரசு திட்டங்களில் தனியார் நிதி மூலதனங்களை அதிகப்படுத்த சூழ்நிலைகளை உருவாக்குவது, விவசாயம், மின்சாரம், போக்குவரத்து ஆகிய துறைகளில் நிலவும் தடைக்கற்களை அகற்றுவது, ஊட்டச்சத்து குறைவை நீக்க 200 மாவட்டங்களில் நடவடிக்கை, அரசு இயந்திரத்தை முடுக்கி ஊழலை ஒழித்துக் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதத்தை அதிகரிக்க, உள்நாட்டு தேவைகளுக்கு வெளிநாடுகளை பெரிதும் நம்பியிருப்பதை குறைத்துக் கொண்டு, இங்கு இருப்பவற்றை வைத்தே தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, அரசு திட்டங்களுக்கு பெரிய அளவில் நிதி தேவைப்படுவதால் தனியார் நிதி பங்களிப்பை அதிகரித்து, அவற்றின் நிதி மூலதனங்களை அதிகப்படுத்துவது அடங்கும். மூன்றாவதாக, முக்கிய துறைகளான நிலக்கரி, விவசாயம், மின்சாரம், தரை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற துறைகளில் நிறைய தடைக்கற்கள் தற்போது இருந்து வருகின்றன. தடைகளை களைந்து இந்த துறைகளை மேம்படுத்திட வேண்டும். நான்காவதாக, நாடு முழுவதும் ஊட்டச்சத்து குன்றியோர் அதிகமாக உள்ள 200 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் கவனம் செலுத்தி, இங்குள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஐந்தாவதாக, அரசு இயந்திரங்களை முடுக்கிவிட்டு, நிர்வாகத் திறனை மேம்படுத்தி அதன் மூலம் ஊழல்களை ஒழித்துக் கட்டவும் நடவடிக்கைகள் மேற்கொள்வது என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் என்பது கடந்த மாதம் 6.6 ஆக இருந்தாலும், இந்த மாதம் அது கணிசமாக உயர வாய்ப்புள்ளது. இது, இனி குறைந்து ஒரு கட்டத்தில் சமநிலைக்கு திரும்பும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment