அன்னையின் மடியில் தவழுவதை போல காதலியின் மடியில் கிடந்து கொண்டு இருப்பவர்கள் அதை தெய்வீக காதல் என்று நினைத்து அறியாமை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் காதலியின் அழகான முகத்தை பார்த்துக் கொண்டு இனிமையான குரலை கேட்டுக் கொண்டிருக்கும் ஆவலில் வாழுகின்ற இவர்கள் காதலின் பலவீனத்தை பலமானதாக கருதிக்கொண்டே காதலிக்கிறார்கள்.
சில நாட்களில் காதலி வளர்ச்சியடையும் போது அவளின் முக மாற்றத்தையும், உடல் தோற்றத்தையும் பார்த்து அவளின் மடியை கடந்து இன்னொருவளின் மடியில் சாய்ந்து கொள்ள நினைக்கும் போதுதான் இவர்களின் காதல் பலவீனப்பட்டது என்பதை அறிந்து கொள்வார்கள்.
நம்முடைய ரசனை உணர்வுகளுக்கு விருந்தளிக்கக் கூடிய எல்லாவற்றையும் நாம் நேசிக்க ஆரம்பித்து விடுகிறோம் அப்படி ரசனைக்காகவே ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்கிறவர்களின் காதலில் எந்த பலமும் இருப்பதில்லை. தொலைக்காட்சி பெட்டியில் ரசனை ஏற்படும் போது வானொலி பெட்டியிலுள்ள ரசனை தீர்ந்து விடுகிறது, இணையதளத்தில் ரசனை ஏற்படும் போது தொலைக்காட்சியின் ரசனை மங்க துவங்குகிறது
இப்படி பெண்களையும் ஒரு ரசனை தரக்கூடிய ஊடகமாக, கருவியாக பயன்படுத்தி காதலிப்பவர்கள் தங்களை நல்ல காதலர்கள் என்று தம்பட்டமடித்து கொண்டிருப்பார்கள்.ஒருவன் காதலியை பற்றி மட்டுமே எப்போதும் சொல்லிக்கொண்டு காதல் கருத்துக்களை மட்டுமே எப்போதும் பேசிக்கொண்டிருந்தால் அவனுடைய காதல், ரசனைக்காதல் என்பதை அறிந்து கொள்ளுங்கள் ஒரு தொலைக்காட்சியை போல, இணையதளத்தை போல காதலியை ஒரு ரசனைக்காகவே பயன்படுத்துகிறான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
காதலில் ரசனை என்பது தேவையானது தான் அதே வேளையில் காதலியை ரசிப்பதை போல காதலையும் ரசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் காதலியின் ரசனை மாறினாலும் காதலின் ரசனை என்றும் மாறுவதில்லை
அவள் என் காதலி, அவளை தொட்டேன், அணைத்தேன் என்று அதன் வகைகளை விவரித்து பேசுவதையே காதலின் பெருமையாக நினைப்பவர்கள் அதையே அன்பாகவும் உணருகிறார்கள், பெண்ணின் தாய்மையையும் காதலின் தூய்மையையும் மறந்து விடுகிறார்கள்.
சிலருக்கு தெரியும் தங்களின் காதல் பலவீனமானது என்று அந்த பலவீனத்திற்காகவே அதை தொடர்ந்து கொண்டும் இருப்பார்கள், தங்களது எண்ணங்கள் களங்கப்பட்டிருப்பதை அறிவார்கள் அந்த களங்கங்களை அனுபவிப்பதற்காக அதையே தொடர்ந்து கொண்டிருப்பார்கள் இவர்களின் காதலோடு வாழ்க்கையும் பலமிழந்து விடுகிறது.
பெண் நாட்டமென்பதை எந்த மனிதனிடமிருந்தும் பிரித்தெடுக்க முடியாது. உறுதியாகவோ, உறுதியற்றோ அது தொடற்ந்து கொண்டுதான் இருக்கும் அதே நேரத்தில் பெண்ணை நாடும் போதெல்லாம் தாய்மையின் அடையாளத்தோடும் அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, பரிவு, பாசம் என அனைத்து கூறுகளையும் ஒருங்கே பெற்ற முப்பட்டக கண்ணாடி போன்றவள் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுகிறவனின் காதல் பலமுள்ளதாக இருக்கும்.
உடலுக்கு சரிவிகித உணவு தேவைப்படுவதைப் போல உள்ளத்திற்கு இந்த அன்பின் கூறுகள் அவசியமானதாகும் இதை உணராதவன் சத்துவத்தை மறந்து சுவையை மட்டும் அனுபவித்து நோய்வாய் படுபவனைப்போல பல மனக்குறைபாடுகளை கண்டுகொண்டு இருப்பான். வெகுவாக கவரக்கூடிய இதுபோன்ற ரசனைகளைக் கொண்டு துருப்பிடித்துப் போன வாழ்வை முலாம் பூசி கற்பனை கனவுகளில் மிதப்பதுதான் இவர்களுக்கு தற்காலிக நிவாரணியாக இருக்கிறது
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் இவர்களுடைய ஆசை, கனவு, ரசனை, இவர்களின் விருப்பம், இவர்களுக்கு பிடித்தது, இவர்கள் நாடுவது, இவர்களின் தேடல்கள் இவை அனைத்தும் மேல் மனதில் தங்கியிருக்கும் மட்டமான உணர்வுகளாகும்
ஆனால் இவைகளையெல்லாம் சரியான ஆக்கப்பாதையில் கொண்டு சென்றால் பல அரிய பெரிய காரியங்களை செய்ய முடியும் பலவீனங்களால் முடக்கப்பட்டு கிடந்தால் எப்படி வலிமையான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
எனவே அனைத்து ஆர்வங்களையும், அனைத்து விருப்பங்களையும் பலமுள்ள நல்ல திறமையினை வளர்க்கும் மேலான பாதையை நோக்கி திருப்புங்கள் அதன் பிறகும் உங்கள் காதல் பலமுள்ளதாக மாறவில்லையென்றாலால் அது பலப்படும் வரையிலும் அதை தொடாதீர்கள்.
ஆயுள் முழுவதும் சுற்றிப் பார்த்தாலும் அலுப்பு தட்டாத சுற்றுலா தலமாக காதலியை பார்ப்பவர்கள் அதன் பலமான மறு புறத்தை பார்ப்பதில்லை, காதலியை ரசனை பொருளாக்காமல் அவளை காதலின் ஊற்றாக உயிர் காற்றாக உரசி நிற்கிறவன்தான் காதலின் பலத்தை கண்டு அடைய முடியும்.
No comments:
Post a Comment