flashvortex.

Saturday, March 10, 2012

உத்தர பிரதேசத்தின் புதிய முதல்வராக அகிலேஷ் யாதவ்?!

உத்தர பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக, சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளரும், கட்சி தலைவர் முலாயம் சிங்கின் யாதவின் புதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவு செய்யப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் உத்தரபிரதேசத்தின் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 224 இல் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது சமாஜ்வாதி கட்சி. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஐந்தாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி மன்ற குழு கூட்டத்திலும் முலாயம் சிங் யாதவ் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் இம்முறை  தேர்தல்களத்தில் அதிரடியாக பிரச்சார பணிகளில் இறங்கி சமாஜ்வாடி கட்சியின் வெற்றியை உறுதி செய்ய அகிலேஷ் யாதவ் கடுமையாக உழைத்திருந்தார் என கூறியுள்ள அக்கட்சியின் சட்ட சபை உறுப்ப்னர்கள், அவரையே முதல்வராக தெரிவு செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

எனினும் யார் முதல்வர் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் முலாயம் சிங் யாதவிடமே விடப்பட்டுள்ளது. முலாயம் சிங்கும், தனது வயது, உடல் நலனை கருத்தில் கொண்டு,  அகிலேஷ் யாதவை பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.  நாளை முக்கிய முடிவு எடுக்கப்படுவதுடன்,  உத்தரபிரதேசத்தின் புதிய முதல்வர் யாரென்பது உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. 38 வயதுடைய அகிலேஷ், மைசூர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளநிலை பட்டத்தையும், சிட்னி பல்கலைக்கழகத்தில் சூழலியல் பொறியியலுக்கான முதுகலை பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment