சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானம், சிறிலங்காவைக் கண்டிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலின் சாம்பர்லெய்ன் டோனஹே தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்பட வேண்டியவை என குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் அமுல்படுத்துவது தொடர்பான தெளிவான திட்டங்களை எதனையும் இதுவரையில் சிறீலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் முனைப்பு திருப்தி அடையும் வகையில் அமையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் அமுல்படுத்த வேண்டும் என்பதே உத்தேச தீர்மானத்தின் பிரதான நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட ஆயுதமோதல்களுக்குப் பின்னர் அர்த்தமுள்ளதும் இறுதியானதுமான தேசிய நல்லிணக்கத்தை சிறிலங்கா ஏற்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கும், சிறிலங்காவின் தேசிய வாழ்வில் தமிழ்மக்களை உண்மையான முறையில் மீளக் கொண்டு வருவதற்கும், போரின் போதான நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூறுதலை உறுதி செய்வதும் உலகிலுள்ள நாடுகளின் தேவையாக உள்ளது.
எல்லாப் பிராந்தியங்களினதும் பிரதிநிதிக்குழுக்களுடன் பரந்தளவிலான ஆலோசனையின் முடிவில், பல உதவிகரமான பரிந்துரைகள் ஆரம்ப வரைவுக்குக் கிடைத்தன.
மனிதஉரிமைகள் பேரவையின் பல பங்காளர்களினது மேலதிக கலந்துரையாடல் மற்றும் கூட்டு அடிப்படையில், நாங்கள் ஒரு மிதமான – நியாயமான - நடுநிலையான தீர்மான வரைபை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
நீண்டகாலமாக வெளிப்படுத்தி வந்த தேசிய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட பரந்தளவிலான விவகாரங்களில் சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்பட விரும்புவதை இந்தத் தீர்மானம் மூலம் நாம் வலியுறுதியுள்ளோம்.
தீர்மானத்தின் ஆரம்ப வரைபு, இதை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு காலக்கெடுவைக் கொண்டிருக்கவில்லை. பின்னர் அதில் ஒரு காலக்கெடு சேர்க்கப்பட்டது.
இந்த ஆண்டின் இறுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள மனித உரிமைகள் பேரவையின் 20வது கூட்டத்தொடரில் மனிதஉரிமைகள் ஆணையாளர் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரும் காலக்கெடு சேர்க்கப்பட்டது.
பின்னர் அந்தக் காலக்கெடு, 2013ம் ஆண்டு நடைபெறும் 22வது கூட்டதொடரில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில், ஒரு ஆண்டுக்கு நீடிக்கப்பட்டது.
நீண்ட ஆயுதமோதல்களுக்குப் பின்னர் அர்த்தமுள்ளதும் இறுதியானதுமான தேசிய நல்லிணக்கத்தை சிறிலங்கா ஏற்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டியதும், சிறிலங்காவின் தேசிய வாழ்வில் தமிழ்மக்களை உண்மையான முறையில் மீளக் கொண்டு வருவதற்கும், போரின் போதான நடவடிக்கைகளுக்குப் பொறுப்புக்கூறுதலை உறுதி செய்வதற்கும் உலகிலுள்ள நாடுகள் ஊக்குவிப்பை செய்ய வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம்.
சிறிலங்காவுக்கான நேரம் கடந்து கொண்டிருக்கிறது.
சிறிலங்காவில் இறுதியான அமைதியை கொண்டு வர, அனைத்துலக சமூகம் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
சிறிலங்கா தொடர்பான இந்தப் பேரவையின் தற்போதைய நகர்வுகள், அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பிரதிபலிப்பதாக உறுதியாக நம்புகிறொம்.
சிறிலங்கா அரசாங்கம் இறுதியான அமைதியை ஏற்படுத்துவதற்கான விதைகளை விதைக்கும் வகையில் உள்நாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எமது கரிசனையை எண்ணற்ற அனைத்துலக மற்றும் உள்நாட்டு அவதானிப்பாளர்கள் பிரதிபலித்துள்ளார்கள்.
இந்தத் தீர்மானத்தின் மூலம், சிறிலங்காவில் உள்ள மக்கள் இந்த இலக்கை அடைவதற்கு, உலக நாடுகள் தமது கரங்களையும் இணைத்து ஒத்துழைப்பை வழங்க முடியும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Saturday, March 10, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment