flashvortex.

Saturday, March 3, 2012

நிர்வாக முடிவுகளில் தலையிடுவதா? உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கேள்வி

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அரசின் கொள்கை முடிவில் தலையிடுவது போல் அமைந்துள்ளதால் அதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கோரியுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவின் விவரம்:

"2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த வழக்கில் 122 உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அது தொடர்பான தீர்ப்பில், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அரசின் கொள்கை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அலைக்கற்றை என்பது இயற்கை வளங்கள் தொடர்புடையது. அனைத்து இயற்கை வளங்களையும் ஏலத்தில் விட ஒரே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் யோசனை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று. அதற்குச் சில வலுவான காரணங்களும் உள்ளன.

அதிகத் தொகையில் ஏலத்தில் எடுப்பவருக்கே இயற்கை வளத்தைக் கொடுக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் யோசனை திருத்தப்பட வேண்டும் என்று அரசு கருதுகிறது. அதனால், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அரசு வகுத்த கொள்கை மக்கள் நலனுக்கு எதிரானது என்றும் தவறுகளுக்கு வழிவகுக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

மக்கள் நலனுக்காக வகுக்கப்படும் கொள்கைகளும் அவற்றை அமல்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் நிர்வாகத்தினரிடம்தான் விடப்பட வேண்டும். அதில் நீதிமன்றம் தலையிடுவதையும் கொள்கை முடிவுகளை விமர்சிப்பதையும் நிர்வாகத்தின் அதிகார வரம்பில் நீதிமன்றம் தலையிடுவதாகக் கருதுகிறோம். வளர்ச்சியைக் கருத்தில் கொண்டுதான் கிராமப்புறங்களில் கூட வயர்லெஸ் தொலைத்தொடர்பு சேவையைக் கொண்டு வர மத்திய அரசு தீர்மானித்தது. அந்தச் சேவையைத் தகுதிவாய்ந்த நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த முடிவு செய்தே கொள்கை முடிவுகள் செயல்படுத்தப்பட்டன. அந்த முடிவை எதிர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. வருவாய் ஈட்டுவதை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு கருதுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் நீதிமன்றப் பார்வையும் அரசின் அணுகுமுறையும் முற்றிலும் வேறுபடுகிறது. மக்கள் நலனுக்காக மட்டுமே இதுபோன்ற கொள்கைகளை அரசு வகுக்கிறது.

அதே சமயம், சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில இயற்கை வளங்களை ஏலத்தில் விட அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதனால் அதிக ஏலத்துக்கு எடுப்பவரிடம்தான் இயற்கை வளங்களை அளிக்க வேண்டும் என்ற தொனியில் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறைபாடு இருப்பதாகக் காணுகிறோம். அப்படி முடிவு செய்தால், அது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கும் மக்கள் நலனுக்கான சட்டங்களுக்கும் எதிராகப் போய்விடும். அதனால் அனைத்துத் துறைகளிலும் இயற்கை வளங்களை ஏலத்தில் விட முடியாது. அது தொடர்பான நீதிமன்ற நிலைப்பாட்டில் இருந்து அரசு முற்றிலும் வேறுபடுகிறது.

அலைக்கற்றை விவகாரத்தில் ஆட்சேபத்துக்குரிய முறையில் ஒதுக்கீடு நடைபெற்றது என்ற காரணத்துக்காக, கொள்கை முடிவே சட்டவிரோதமானது என்று கூறுவதை ஏற்க முடியாது. மக்கள் நலன், அரசின் செயல் திட்டங்கள் போன்றவற்றை மையமாக வைத்தே அரசின் திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்படும். அதை அமல்படுத்தும் சுதந்திரமும் அதிகாரமும் கொள்கைகளை வகுப்பவர்களிடம்தான் இருக்க வேண்டும்' என்று மத்திய அரசு மறு ஆய்வு மனுவில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment