flashvortex.

Sunday, March 11, 2012

ரஷ்யாவில் புடினை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கில் திரண்டனர் மக்கள்

ரஷ்யாவில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், பிரதமர் விளாடிமிர் புடின் மோசடியால் வெற்றி பெற்றதாகக் குற்றம்சாட்டி, நேற்று ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, எதிர்பார்த்ததை விட குறைந்த அளவில் தான் கூட்டம் வந்தது.
ரஷ்யாவில், கடந்த 4ம் தேதி, அதிபர் தேர்தல் நடந்தது. இதில், பிரதமர் விளாடிமிர் புடின், ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சியின் சார்பில் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகளில், புடின் 64 சதவீத ஓட்டுகளைப் பெற்று, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்தாண்டு டிசம்பரில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சி, மோசடியால் வெற்றி பெற்றதாகக் குற்றம்சாட்டி, லட்சக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, புடினுக்கு கடும் நெருக்கடி நேரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலவரம் மாறிவிட்டது. நேற்று, தலைநகர் மாஸ்கோவின் நோவி அர்பாத் பகுதியில், எதிர்க்கட்சியினர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்பகுதியில், 50 ஆயிரம் பேர் மட்டும் கூடுவதற்கு, போலீசார் அனுமதியளித்திருந்தனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்த்ததை விட, மிகக் குறைவாகவே மக்கள் கூட்டம் வந்திருந்தது. வந்தவர்கள், 25 ஆயிரம் பேர் என, எதிர்க்கட்சித் தரப்பிலும், 10 ஆயிரம் பேர் என, செய்தி நிறுவனங்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச நாடுகள், இந்த அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொண்டாலும், சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், இத்தேர்தலிலும், முடிவுகள் புடினுக்கு சாதகமாக ஆக்கப்பட்டதாகக் கருத்து தெரிவித்துள்ளன. நேற்றைய ஆர்ப்பாட்டத்திற்கு, மிகக் குறைவான அளவில் கூட்டம் வந்தது குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சிகள், புடின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுக்க, தாங்கள் தவறிவிட்டதால், மக்கள் குறைவாக வந்திருக்கலாம் என்று கூறின. அதே நேரம், இடதுசாரி இயக்கத்தின் செர்கெய் உடல்ஸ்டோவ், மே 1ம் தேதி, 10 லட்சம் மக்கள் திரளும் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment