லாட்டரி அதிபர் மார்ட்டினின் கூட்டாளியான இவர், தமிழகம் முழுவதும் ரகசியமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ளது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை, ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர், 25வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன், 52; தன் வீட்டிலேயே ஏர்கூலர், கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை மையம் ஒன்றை நடத்தி வந்தார். இவரது வீட்டிற்கு நள்ளிரவில், வாகனங்களில் வந்து, பெட்டி பெட்டியாக பொருட்கள் இறங்கியது குறித்து, அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்தனர். இது குறித்து, போலீசுக்கு தகவலளிக்கப்பட்டு, போலீசாரும் ரகசியமாக கண்காணித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த வீட்டில், சட்டத்திற்கு புறம்பான குற்ற நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட பொருட்கள் இருப்பதாகவும், வெளிமாநில லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது.நம்பகமான ரகசிய தகவலையடுத்து, நேற்று அதிகாலை 2 மணிக்கு, சட்ட விதிமுறைகளை பின்பற்றி, நாகராஜனின் வீட்டை போலீசார் சோதனை நடத்தினர். எட்டு மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. முதல் தளத்தில் இருக்கும் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒன்றும் சிக்கவில்லை. தொடர்ந்து, கீழ்தளத்தில் உள்ள நாகராஜன் நடத்தி வந்த, "அஞ்சனா ஹோம் அப்ளையன்சஸ்' நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அங்கு கணக்கில் காட்டப்படாத, முறைப்படியான சம்பாத்திய வழிகளில் அடங்காத ஏழு கோடியே 20 லட்சத்து 5,000 ரூபாய் கைப்பற்றப்பட்டது.இந்த பணம் குறித்து நாகராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டதில், சரியான பதில்களை அவரால் கூற முடியவில்லை.
தொடர் விசாரணையில், இவர் 1981ம் ஆண்டு முதல் லாட்டரி தொழில் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்ததாகவும், தற்போது லாட்டரி தொழில் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.மேலும், லாட்டரி சீட்டுகளை ஐதராபாத் மற்றும் டில்லியில் இருந்து சிக்கிம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதாகவும், அவ்வாறு அனுப்பும் போது, ஒரு சில லோடுகளை இங்கு கொண்டு வந்து, தமிழகத்தில் வெவ்வேறு நபர்களுக்கு வினியோகம் செய்து வந்ததாகவும்கூறியுள்ளார்.இது தவிர, இத்தொழிலை தன்னுடன் 1984ல் இருந்து வேலை பார்த்த கும்பகோணத்தை சேர்ந்த மூர்த்தி சேர்ந்து செய்து வந்ததாகவும், அவ்வாறு தொழில் செய்து சம்பாதித்த பணம் இரண்டு கோடி ரூபாயும் இதில் அடக்கம் என்றும், மீதமுள்ள பணம் மூர்த்தி, லாட்டரி தொழில் செய்து அதிலிருந்து பெறப்பட்டது என்றும், அந்த பணத்தை அவர் தன்னிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும் விசாரணையின் போது நாகராஜன் தெரிவித்தார்.
மேலும், மூர்த்திக்கு லாட்டரி விற்பனையில் தற்போது கைதாகி சிறையில் இருக்கும் மார்ட்டின் மற்றும் சிலருடன் தொடர்பு உண்டு என்றும், அவரிடம் விசாரித்தால் உண்மை நிலவரம் தெரியவரும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, கைப்பற்ற பொருட்களுடன் நாகராஜனை கைது செய்த போலீசார் அவர் மீது, ஆதம்பாக்கம் போலீசில் லாட்டரி சீட்டுகள் பரிவர்த்தனை மற்றும் சட்டவிரோதமாக பணம் வைத்திருந்தது தொடர்பாக நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி, நேற்று மாலை
ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைத்தனர். நாகராஜன் அளித்த தகவலின் அடிப்படையில், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் தலைமையில் போலீசார், அண்ணா நகரில் உள்ள கும்பகோணம் மூர்த்தியின் வீட்டை சோதனையிட்டனர். அங்கு கணக்கில் வராத பணம் 50 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது. ஆனால், மூர்த்தி தலைமறைவாகி விட்டார். மூர்த்தியை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.இது குறித்துதென்மண்டல இணை கமிஷனர் சண்முக ராஜேஷ்வரன் கூறியதாவது: நாகராஜன் வீட்டில் இருந்து லாட்டரியை வெளிமாநிலங்களுக்கு அனுப்பியது தொடர்பான ஆவணங்கள் ஒரு பெட்டியில் இருந்து எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இதில் தொடர்புடைய மற்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.மார்ட்டின், மூர்த்திக்கு நெருங்கிய நண்பர் என நாகராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து, அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். லாட்டரிகள் இங்கு யார் யாருக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. வருமான வரித் துறை அதிகாரிகளும் கணக்கில் வராத பணம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.இது தவிர, நேற்றிரவு தில்லை கங்கா நகர் பகுதியில் வாகன சோதனை நடத்தப்பட்ட போது, வாகனத்துடன் கடத்தப்பட்ட 1.5 லட்ச ரூபாய் பணத்தை எஸ்.ஐ., முருகதாஸ் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து மீட்டுள்ளனர்.இவ்வாறு சண்முக ராஜேஷ்வரன் கூறினார்.
No comments:
Post a Comment