flashvortex.

Monday, March 5, 2012

சிறீலங்காவை, இந்திய மத்திய அரசு கைவிட்டுள்ளதா?

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று தான் நம்புவதாக இந்தியப் பிரதமர் செயலகத்துக்கான மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தின் போது, சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியா செயற்படும் என்று சில நாளேடுகளில் நேற்று வெளியான செய்திகளையும் அவர் நிராகரித்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான மனிதஉரிமை மீறல் குறித்த தீர்மானத்தில், சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்டதைச் சுட்டிக்காட்டி, தற்போது மட்டும் இந்தியா எவ்வாறு எதிர்க்க முடியும் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த இணையமைச்சர் நாராயணசாமி, தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சியினர் ஆகியோரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்தியா வாக்களிக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதே கருத்தை மத்திய அமைச்சர் வாசனும் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நாராயணசாமி, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், ஈழத்தமிழர்களை ஒருபோதும் காங்கிரஸ் கைவிடாது என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்படத்தக்கது.

No comments:

Post a Comment