flashvortex.

Saturday, March 10, 2012

விஜயகாந்த் சஸ்பெண்ட்: விதிகளின்படியே முடிவு: சட்டசபை செயலர்

எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தை சஸ்பெண்ட் செய்வதற்கு பின்பற்றிய நடைமுறை, எடுக்கப்பட்ட முடிவானது, அரசியலமைப்புச் சட்டத்துக்கும், சட்டசபை விதிகளுக்கும் உட்பட்டது' என, சென்னை ஐகோர்ட்டில் சட்டசபை செயலர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டசபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களை நோக்கி கையை நீட்டியதாகவும், நாக்கை மடக்கியதாகவும் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்வது என, உரிமைக் குழு முடிவெடுத்தது. உரிமைக் குழுவின் முடிவு, சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.தன்னை "சஸ்பெண்ட்' செய்ததை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் விஜயகாந்த் மனு தாக்கல் செய்தார். இம்மனுவுக்கு சட்டசபை செயலர் ஜமாலுதீன் தாக்கல் செய்த மனு:சட்டசபையில் நடந்த நிகழ்வுகளின் வீடியோ காட்சிகளை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட உரிமைக் குழு உறுப்பினர்கள் பார்த்தனர். மனுதாரர் தரப்பையும் கேட்க வேண்டும் என, குழு முடிவெடுத்தது. பிப்ரவரி 2ம் தேதி குழு கூட்டத்துக்கு வருமாறு, விஜயகாந்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வரவில்லை. ஆனால், ஒரு கடிதம் அனுப்பினார்.அந்தக் கடிதத்தில், வீடியோ காட்சியில் உள்ள அவரது நடத்தையை, மிரட்டும் சைகையை மறுக்கவில்லை. ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தன்னைப் பார்த்து சத்தம் போட்டதாகவும், திட்டியதாகவும் கூறியுள்ளார். ஆனால், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக மனுதாரரோ, எதிர்க்கட்சி உறுப்பினர்களோ, சபாநாயகரிடம் நோட்டீஸ் எதுவும் அளிக்கவில்லை.

மனுதாரரின் கடிதத்தை உரிமைக் குழு பரிசீலித்தது. உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. பின், உரிமை மீறல் நடந்திருப்பதாக குழு முடிவுக்கு வந்தது. குழுவின் அறிக்கையானது, உறுப்பினர்கள் படிப்பதற்காக, சட்டசபை நூலகத்தில் வைக்கப்பட்டது. 2ம் தேதி சட்டசபை கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவருக்கு சபையில் அறிக்கையின் நகல் வழங்க முடியவில்லை. இருந்தாலும், தே.மு.தி.க., துணைத் தலைவரிடம் அறிக்கையின் நகல் வழங்கப்பட்டது. அவர் படித்தார்.குரல் ஓட்டெடுப்பு மூலம், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தே.மு.தி.க., துணைத் தலைவர், இந்தப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க கோரினார். சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டால், அதன்பின் மேற்கொண்டு விவாதம் நடத்த அனுமதியில்லை. இதுதான் பார்லிமென்ட் நடைமுறை.

சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சபாநாயகரின் அறிவிப்பு, பத்திரிகைகளில் வெளிவந்தது. சட்டசபையின் செயலர் என்கிற முறையில், சபாநாயகரின் உத்தரவுப்படி, சபையின் முடிவை மனுதாரருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினேன். அரசியலமைப்புச் சட்டம், சபை விதிகளுக்கு உட்பட்டு, நடைமுறை பின்பற்றப்பட்டு, முடிவெடுக்கப்பட்டது. மனுதாரரின் உரிமைகள் எதுவும் மீறப்படவில்லை.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.விசாரணையை 14ம் தேதிக்கு நீதிபதி ராமசுப்ரமணியன் தள்ளி வைத்துள்ளார்.

No comments:

Post a Comment