இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறலை கண்டித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் விடுதலைப் புலிகளை எதிர்த்து அந்த அரசு நடத்திய போரில் பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.
இதன் அடிப்படையில் ஐ.நா. மன்றம் நிபுணர் குழுவை அமைத்து விசாரித்தது. மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளது. போர்க் குற்றவாளிதான் என்றும் உணரப்பட்டு இலங்கை அரசுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை அரசு, தானே ஒரு குழுவை அமைத்து விசாரித்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளும் வெளி வந்துள்ளன. இலங்கை அதையும் நிறைவேற்றவில்லை.
இன்று இலங்கையில் தமிழ்ப் பகுதியில் தமிழ் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இளைஞர்கள் கடத்திக் கொல்லப்படுகின்றனர். இளம் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்.
தமிழ்ப் பகுதிகள் இராணுவ ஆக்கிரமிப்பிலேயே இன்றும் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் மனித உரிமைகளின் பேரால், இலங்கை அரசைக் கண்டித்து ஜனநாயக நாடுகளின் சார்பில் அமெரிக்க நாடு, ஜெனீவாவில் கண்டனத் தீர்மானம் கொண்டு வருகிறது.
இந்த தீர்மானம் முழு அளவிற்கு நமக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், இதை நிறைவேற்றுவதன் மூலம் இலங்கை அரசை உலக அபிப்பிராயத்தின் முன்பு குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியும்.
இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். மனித உரிமைக் குழுவில் ஒரு குறிப்பிட்ட நாட்டை எதிர்த்து கண்டனத் தீர்மானம் கொண்டு வரக் கூடாது என்று இந்தியா கூறி வருகிறது.
இதன் மூலம் இலங்கையைக் காப்பாற்ற முயற்சிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு முழு மனதோடு ஆதரிக்க வேண்டும்.
நடுநிலை வகிப்பதையோ அல்லது அந்த தீர்மானம் வருகின்றபோது அதில் கலந்து கொள்ளாமல் இருப்பதையோ மேற்கொண்டால் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.
Monday, March 12, 2012
அமெரிக்காவின் தீர்மானத்தினை, தமிழ்நாட்டு மக்கள் சார்பில் ஆதரிக்க வேண்டும் : விஜயகாந்த்
Labels:
செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment