flashvortex.

Friday, March 9, 2012

கண்டியில் இடம்பெற்ற மர்மச் சந்திப்பு - காப்பாற்றப்படுமா சிறீலங்கா

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புரெனிஸ் நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளார். 

தகவல்கள் வெளியே கசியாமல் தவிர்க்கும் வகையில், கண்டியில் உள்ள அதிபர் மாளிகையில் இந்தச் சந்திப்பு நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது. 

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதல் தொடர்பாக சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் முன்வைத்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 
காலையுணவுடன் நடந்த இந்தச் சந்திப்பில் அமெரிக்கத் தூதுவருடன் வேறு அதிகாரிகள் எவரும் பங்கு கொள்ளவில்லை. 

சிறிலங்கா அதிபருடன் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ், வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம, வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலர் சேனுகா செனிவிரத்ன மற்றும் மத்திய மாகாண முதல்வர் சரத் எக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இந்தச் சந்திப்புத் தொடர்பான தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிப்படவில்லை. 

ஆனால், அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பாகவே இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கையளித்த சில மணிநேரங்களில், அதுவும் வழக்கமான சந்திப்புகள் ஒழுங்கு செய்யப்படாத இடத்தில் நடந்துள்ள இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment