flashvortex.

Saturday, March 3, 2012

இலங்கையில் அமெரிக்கப் படைகள்: 'தவறான தகவல்'

இலங்கையில் அமெரிக்காவின் சிறப்புப் படைகள் நிலைகொண்டிருப்பதாக வெளியான தகவல்கள் தவறானவை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திலேயே அமெரிக்க பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பணியக அதிகாரிகள், இருநாட்டு கூட்டுறவுகளை ஊக்குவிக்கக்கூடிய நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் பயிற்சி நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்றும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உடன்பாடுகளின்படியே இவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றை புனர்நிர்மானம் செய்யும் வேலைத்திட்டங்களுக்காக அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளை மையத்தினூடாக கொழும்பிலுள்ள தூதரகம் 2009ம் ஆண்டிலிருந்து 9 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புப் படையினர் அண்மைக் காலங்களில் இலங்கையுடன் இணைந்து சில மருத்துவ மற்றும் மனிதாபிமான பணிகளுக்கான கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் பலவற்றில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக அமெரிக்காவின் சிறப்புப் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பெண்டகன் பாதுகாப்புத் தலைமையக அதிகாரியை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், அமெரிக்கப் படைகள் எதுவும் தமது மண்ணில் நிறுத்தப்படவில்லை என்றும் அவ்வாறு வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை என்றும் இலங்கை மற்றும் இந்திய பாதுகாப்புத் துறைகள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment