சிறீலங்கா படையினர் மேற்கொண்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் அடங்கிய 'சிறீலங்காவின் கொலைக்களம்' என்ற காணொளியை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டு பல அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த நிறுவனம் மீண்டும் 'தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள்' என்ற காணொளியை வெளியிட தீர்மானித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் சிறீலங்காவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்ற நிலையில் இக் காணொளி வெளிவருவது சிறீலங்காவிற்கு பெரும் சவாலாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இறுதி கட்ட போரின் இடம்பெற்றதாக கூறப்படும் நான்கு குற்றங்கள் தொடர்பாக இப்படத்தில் விசேடமாக ஆராயப்பட்டு உள்ளது.
இக்குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்? என்றும் ஆய்வு செய்யப்பட்டு இருக்கின்றது.
யுத்த சூனிய பிரதேசத்தில் பொதுமக்கள் மீதும் வைத்தியசாலைகள் மீதும் நடத்தப்பட்ட பயங்கரமான எறிகணைத் தாக்குதல்கள்
பல்லாயிரக் கணக்கான பொதுமக்களுக்கு உணவு, மருந்து ஆகியன மறுக்கப்பட்டதுடன் யுத்த வலயத்துக்கு மனிதாபிமான உதவிகள் வர விடாமல் தடுக்கப்பட்ட சம்பவங்கள்
மீட்பு நடவடிக்கையின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டமையுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க கைதிகள் நிர்வாணம் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள்
12 வயது சிறுவன் ஒருவன் மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்
என்பவை இந்த ஆவணப் படத்தில் முக்கியமாக காட்டப்பட்டு இருக்கின்ற நான்கு வகையான போர்க் குற்றங்கள்.
எதிர்வரும் 7ஆம் திகதி ஜெனிவாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் குறித்த திரைப்பட விழாவில் இந்த புதிய ஆவணப்படமும் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை குறித்த காணொளி தொடர்பில் தாம் அச்சம் கொள்ளவில்லை என சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறீலங்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பிரித்தானியாவின் சனல் -4 தொலைக்காட்சி நிறுவனம் பல போலியான வீடியோக்களை ஒளிபரப்பியது.
எனினும் அவுஸ்திரேலிய துறைசார் நிபுணர்கள் அந்த வீடியோக்களை ஆராய்ந்து அவை புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பதை உலகறியச் செய்தனர். இதன்மூலம் சனல் -4 நிறுவனத்தின நம்பகத்தன்மை கேள்விக் குறியாகிவிட்டது.
எனவே அவர்கள் எமக்கு எதிராக எத்தனை வீடியோக்களை வெளியிட்டாலும் அது தொடர்பில் சிறீலங்கா கவனத்தில் எடுக்காது என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
Friday, March 2, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment