அண்டார்டிகா தென் துருவக் கண்டத்தின் விளிம்புப் பகுதிகளில் அந்த இடத்துக்குச் சொந்தமில்லாத வேற்றுக் கண்டத் தாவரங்கள் வளரத் துவங்கியிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இவ்வாறாக அந்த இடத்தில் முளைக்க ஆரம்பித்துள்ள தாவரங்களில் பல அண்டார்டிகா செல்லும் விஞ்ஞானிகள் சுற்றுலாப் பயணிகளின் ஆடையில் ஒட்டியிருந்த மகரந்தம் மற்றும் விதைகளால் தோன்றியவை என்றும், அறியாமல் இவர்கள் இத்தாவரங்களை இங்கு கொண்டு போய் சேர்த்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
அண்டார்டிகா கண்டத்தின் மிகப் பெரும்பான்மையான இடங்கள் உறைபனியால் மூடப்பட்டுள்ளது.ஆனால் உறைபனி இல்லாத ஒரு சில இடங்களில், குறிப்பாக தென்னமெரிக்க கண்டத்தை அருகாமை வரை செல்லும் வால் போன்ற அண்டார்டிக் தீபகற்ப பகுதியில் பெருமளவில் தாவரங்கள் முளைத்துள்ளன.
இந்தப் பகுதி கடந்த சில ஆண்டுகளில் மிக வேகமாக வெப்பமடைந்து வந்திருப்பதால்தான் இந்த இடங்களில் தாவரங்கள் தோன்ற முடிந்துள்ளது.
அண்டார்டிகா செல்பவர்கள் தாங்கள் உணராமலேயே எந்த அளவில் தாவர விதைகளை அக்கண்டத்துக்கு கொண்டு செல்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அக்கண்டம் செல்லும் விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உடுத்தியுள்ள ஆடைகளின் மடிப்புகள், சப்பாத்துகளின் இடுக்குகள் போன்ற இடங்களை பரிசோதித்தபோது, சராசரியாக ஒருவர் பத்து தாவரங்களின் விதைகளையோ மகரந்தங்களையோ இக்கண்டத்தில் போய் சேர்த்து விடுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
இவ்வகையாக ஒரு வருடத்தில் எழுபதாயிரம் வகையான விதைகள் மகரந்தங்கள் அண்டார்டிகா சென்று சேர்வதாக கணக்கிடப்படுகிறது.
இவற்றில் பாதியளவான வகைகள் அண்டார்டிகாவில் பிழைத்துவிடக்கூடியவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
காலப்போக்கில் இந்த தாவரங்கள் எல்லாம் அண்டார்டிகாவின் இயற்கைச் சூழலை மாற்றியமைத்துவிடக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அண்டார்டிகா செல்வோர் அவ்விடத்துக்கு சொந்தமில்லாத தாவரங்களையோ விலங்குகளையோ அங்கு கொண்டு செல்கிறார்களா என்பதை கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகின்றனர்.
No comments:
Post a Comment