flashvortex.

Saturday, March 3, 2012

சி.பி.ஐ., வளையத்தில் உதயகுமார், லால்மோகன்: எந்த நேரத்திலும் பிடிபட வாய்ப்பு

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, தடை செய்யப்பட்ட பகுதிகளில் போராட்டம் நடத்தியது தொடர்பாக, உதயகுமார் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்ய, சி.பி.ஐ., நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, மக்களை பீதியில் ஆழ்த்தி, தடை செய்யப்பட்ட பகுதிகளில் போராட்டம் நடத்துவதாக, உதயகுமார் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. போராட்டம் தொடர்பாக, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், நேற்று வரை, 225 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

சி.பி.ஐ., வலை: இதுகுறித்து, மத்திய உள்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: போராட்டக்காரர் உதயகுமார், அவரது கூட்டாளிகள் புஷ்பராயன், மைபா ஜேசுராஜன், பாதிரியார் ஜெயக்குமார், ஜெர்மன் ஹவாலா ஏஜன்ட் ஹெர்மானுடன் தொடர்புடைய லால்மோகன் ஆகியோரது நடமாட்டங்களை, சி.பி.ஐ., போலீசார் தங்கள் வளையத்தில் கொண்டு வந்துள்ளனர். உள்ளூர் கியூ பிரிவு போலீசார் மற்றும் சிறப்பு பிரிவு சி.ஐ.டி., போலீசாரும், சி.பி.ஐ.,க்கு துணையாக, களத்தில் இறங்கியுள்ளனர். பல்வேறு இடங்களுக்கு உதயகுமார் காரில் செல்லும் போது, ஒவ்வொரு காராக மாறிச் செல்வதாக, சி.பி.ஐ., போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சி.பி.ஐ., போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

செயற்கைக்கோள்: இது தவிர, இடிந்தகரை பகுதியை, செயற்கைக்கோள் மூலம் கண்காணித்து வருகின்றனர். எந்த நேரத்திலும், உதயகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் நிதி அளித்த தொண்டு நிறுவனத்தினரை, சி.பி.ஐ., போலீசார் விசாரணைக்கு பிடித்துச் செல்லலாம் என, மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உதயகுமார் கைதாகும் வேளையில், இடிந்தகரையில் பயிற்சியளிக்கப்பட்ட அவரது ஆதரவாளர்கள், வன்முறையில் ஈடுபடலாம் என, போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதை சமாளிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கூடுதல் டி.ஜி.பி., திடீர் ஆய்வு: கூடங்குளம் அணு மின் நிலையத்தில், தமிழக கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். கூடங்குளத்திலிருந்து, கடலோர கிராமங்களுக்குச் செல்லும் வழிகளை கேட்டறிந்தார். அவரது ஆய்வு மூலம், தமிழக அரசு விரைவில் கூடங்குளம் விவகாரத்தில், போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அணு மின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவே, கூடுதல் டி.ஜி.பி., பார்வையிட்டதாக, தமிழக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment