flashvortex.

Monday, March 5, 2012

பகுஜன் சமாஜ் - காங்கிரஸ் கூட்டணி?

உத்தரப் பிரதேசத்தில் தனித்து ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை எந்தக் கட்சிக்கும் முழுமையாக இல்லை. தேர்தல் வாக்குக் கணிப்பு முடிவுகளும் இதைத்தான் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் என்று காங்கிரஸ் முக்கிய தலைவரும், மத்திய உருக்கு துறை அமைச்சருமான வேணி பிரசாத் வர்மா வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். ஆனால் அவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் உடனடியாக மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
கடும் விமர்சனங்கள்: உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டமாக பேரவைத் தேர்தல் முடிந்துள்ளன. இங்கு மாயாவதி தலைமையிலான ஆளும் பகுஜன் சமாஜ், முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே 4 முனைப் போட்டி இருந்தது. பிரசாரத்தின் போது கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிப் பேசினர். முக்கியமாக மாயாவதி, முலாயம் சிங் ஆகியோரை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார்.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது... இந்நிலையில் அங்கு எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற நிலைதான் உருவாகும் என வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சமாஜவாதி அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு இரண்டாமிடம் கிடைக்கும் என்று தெரிகிறது.

கட்சிகளின் கணக்கு: எனவே யாருடன் கூட்டணி அமைத்து எப்படி ஆட்சியைப் பிடிப்பது என்று சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் யோசனையில் உள்ளன.

அதே நேரத்தில் காங்கிரஸ், அதன் கூட்டணியில் உள்ள அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக தளம் ஆகிய கட்சிகள் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளித்தால் தங்களுக்கு அதிக ஆதாயம் கிடைக்கும் என்று கணக்கிட்டு வருகின்றன.

பகுஜன் சமாஜுடன் காங்கிரஸ்: இந்நிலையில் தில்லியில் பேசிய மத்திய அமைச்சர் வேணி பிரசாத் வர்மா, "சமாஜவாதி கட்சி கிரிமினல்களின் கட்சி, அவர்கள் ஆட்சி அமைத்தால் உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிடும். எனவே தலித் ஆதரவு கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது நல்லது' என்று தெரிவித்தார்.

இதன் மூலம் பகுஜன் சமாஜுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதை அவர் விரும்புகிறார் என்பது தெரியவந்தது. ஆனால் அவரது கருத்துக்கு காங்கிரஸில் இருந்து உடனடியாக எதிர்ப்பு கிளம்பியது. உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி உள்ளிட்டோர், "இது வேணி பிரசாத்தின் சொந்த கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல' என்று கூறினர்.

இதன் மூலம் சமாஜவாதி கட்சியுடன் கூட்டணி அமைக்க அவர்கள் விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

தேர்தல் முடிவுக்கு பிறகு பார்க்கலாம் - அகிலேஷ் யாதவ்: இதனிடையே கூட்டணி அமைப்பதா? இல்லையா? என்பதை தேர்தல் முடிவுக்குப் பின் யோசிப்போம் என்று சமாஜவாதி தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

உங்களுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் காங்கிரஸிடம் ஆதரவு கேட்பீர்களா? என்ற கேள்விக்கு, தேர்தல் முடிவுக்குப் பிறகு இது குறித்து பேசலாம் என்றாரே தவிர, காங்கிரஸýடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று மறுப்புத் தெரிவிக்கவில்லை.

இதன் மூலம் சமாஜவாதியும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் இருப்பது தெளிவாகியுள்ளது. எனினும் மார்ச் 6-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்குப் பின் யாருடன் யார் கைகோர்ப்பார்கள்? யார் யாருக்கு ஏமாற்றம்? யார் யாருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்பது தெரியவரும்.

No comments:

Post a Comment