flashvortex.

Tuesday, March 13, 2012

இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் விளக்கம்

பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும், இலங்கை நல்லிணக்ககுழுவே அத்தகைய யோசனையை முன்வைத்திருப்பதாகவும் திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருக்கிறார்.

அதே நேரம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் முன் உள்ள தீர்மானத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு முன்முயற்சியும் இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் செல்வதாக இருக்கவேண்டும், இரு சமூகங்களுக்கிடையில் பிணக்கை அதிகப்படுத்துவதாக இருக்கக்கூடாது, குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டறியவும் வேண்டும், இணக்கமான சூழல் அங்கே உருவாகவேண்டும், அதுவே இந்தியாவின் குறிக்கோள் என மன்மோகன்சிங் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிடுகிறார்.
மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க தீர்மானத்தையே இந்தியா ஆதரிக்கவேண்டும் என ஏறத்தாழ தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கின்றனர்.
கருணாநிதிக்கு தனது மறுமொழியாக மன்மோகன் சிங், இலங்கையில் மோதல்கள் முடிவுற்றதிலிருந்து தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும், அங்கே மாமூல் நிலை திரும்பவேண்டுமென இலங்கை அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதைக்குறிப்பிடுகிறார். மேலும் இலங்கையில் அவசரகாலச் சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டிருக்கின்றன, வட மாகாணத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன, பல்வேறு மறுவாழ்வுப்பணிகளில் இந்தியா தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறது, நிதி உதவி செய்கிறது என்றும் அவர் கூறுகிறார்.
எப்படியும் இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும், மற்ற குடிமக்களுக்கு சமமாக நடத்தப்படவேண்டும், அவர்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழவேண்டும், இதுவே இந்தியாவின் இலட்சியம், அவ்விலக்கை அடையும் வகையிலேயே அதன் நடவடிக்கைகளும் அமையும் என்கிறார் பிரதமர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செவ்வாய்கிழமையன்று மனித உரிமை கவுன்சில் தீர்மானம் குறித்த பிரச்சினை அனைத்து கட்சியனராலும் எழுப்பப்பட்டது.

No comments:

Post a Comment